இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ விதியை மீறியதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ஆடும் அணிகளில் ஒன்றான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஷாருக்கானும் ஒருவர். இந்நிலையில், அந்த அணியின் ஜெர்சி அறிமுக விழாவில் தினேஷ் கார்த்திக்கும் கலந்துகொண்டார். 

பிசிசிஐ விதிப்படி பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர், முன் அனுமதியின்றி வேறு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது. அதனால் தினேஷ் கார்த்திக்கிற்கு விளக்கம் கேட்டு பிசிசிஐ செயலாளர் ராகுல் ஜோஹ்ரி கையெழுத்திட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உங்கள் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. 

அந்த நோட்டீஸிற்கு விளக்கமளிக்க மூன்று வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், 3 நாட்களுக்குள்ளாக தலைதெறித்து மன்னிப்பு கேட்டுள்ளார் தினேஷ் கார்த்திக். ட்ரின்பாகோ அணியில் நான் ஆடவும் இல்லை, அந்த அணிக்கும் எனக்கும் எந்தவிதத்திலும் தொடர்பும் இல்லை. ஆனாலும் பிசிசிஐயின் ஒப்புதல் பெறாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.