ஒரு ஆள் ஒரே நேரத்துல 2 இடத்துல இருக்கமுடியாது! டிராவிட்டை விமர்சித்த ரவி சாஸ்திரிக்கு தினேஷ் கார்த்திக் பதிலடி
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒய்வு எடுத்துக்கொண்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு எடுத்துக்கொண்டதை விமர்சித்த ரவி சாஸ்திரிக்கு தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்துள்ளார்.
டி20 உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறி ஏமாற்றமளித்தது. டி20 உலக கோப்பை முடிந்த உடனேயே இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இந்த தொடரில் ஓய்வு எடுத்துக்கொண்டார். அதனால் விவிஎஸ் லக்ஷ்மண் இந்த தொடரில் பயிற்சியாளராக செயல்படுகிறார்.
இதற்கு முன்பாக ஏற்கனவே இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களிலும் லக்ஷ்மண் பொறுப்பு பயிற்சியாளராக செயல்பட்டிருக்கிறார். அவற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணங்களின்போது மெயின் இந்திய அணி வேறு தொடரில் ஆடியதால் ராகுல் டிராவிட் அந்த அணியின் பயிற்சியாளராக சென்றதால், அடுத்த லெவல் அணிக்கு லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட்டார்.
ஆனால் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் ராகுல் டிராவிட் ஓய்வில் இருந்ததால் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட்டார். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலும் ராகுல் டிராவிட் ஓய்வு எடுத்த நிலையில், அதிகமாக ஓய்வு எடுப்பதாக முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து கூறியிருந்த ரவி சாஸ்திரி, பிரேக் எடுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. எனது அணியை பற்றியும் எனது வீரர்களை பற்றியும் நன்றாக தெரிந்துகொள்ள அவர்களுடன் அதிகமான நேரம் இருக்கத்தான் விரும்புவேன். இவ்வளவு அதிகமான பிரேக்குகள் எதற்கு..? உண்மையாகவே எனக்கு தெரியவில்லை. ஐபிஎல் நடக்கும் 2-3 மாதங்கள் ஓய்வில் தானே இருக்கிறீர்கள். அந்த ஓய்வே போதுமானது. மற்ற நேரம் முழுவதும் ஒரு பயிற்சியாளராக அணியுடன் இருக்கவேண்டும். பயிற்சியாளர் யாராக வேண்டுமானால் இருக்கட்டும். ஆனால் பிரேக் எடுக்காமல் அணியுடன் இருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.
இதுதொடர்பாக ரவி சாஸ்திரிக்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், நவம்பர் 30ம் தேதி தான் நியூசிலாந்து தொடர் முடிவடைகிறது.அதே 30ம் தேதி அடுத்த தொடருக்கு இந்திய அணி வங்கதேசத்தில் இருக்கவேண்டும். ஒரே நேரத்தில் ராகுல் டிராவிட் 2 இடத்தில் இருக்க வாய்ப்பில்லை. எனவே நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் இல்லை. இது புரிந்துகொள்ளக்கூடிய விஷயம் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
நியூசிலாந்து தொடர் நவம்பர் 30ம் தேதி முடிவடைகிறது. டிசம்பர் 4ம் தேதி முதல் தொடங்கும் வங்கதேச சுற்றுப்பயணத்துக்கு நவம்பர் 30ம் தேதி இந்திய அணி வங்கதேசத்திற்கு செல்கிறது. அதைத்தான் தினேஷ் கார்த்திக் சுட்டிக்காட்டியுள்ளார்.