Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND தம்பி சிராஜ் இதெல்லாம் தேவையில்லாத ஆணி..! தினேஷ் கார்த்திக் அட்வைஸ்

பேட்ஸ்மேன்களை வீழ்த்திய பிறகு, அவர்களிடம் ஆக்ரோஷத்தை காட்டுவது தேவையற்ற ஒன்று என்று ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜுக்கு தினேஷ் கார்த்திக் அறிவுரை கூறியுள்ளார்.
 

dinesh karthik feels mohammed siraj aggression towards batsman is unnecessary
Author
London, First Published Aug 12, 2021, 6:13 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிரா ஆனது. மழையால் கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது. 2வது டெஸ்ட் இன்று தொடங்கி நடந்துவருகிறது.

இந்த தொடரில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம். ஏனெனில் ஸ்விங்கிற்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால், பேட்டிங்கில் ஸ்கோர் செய்வதுடன், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது மிக மிக அவசியம்.

அந்தவகையில், முன்னெப்போதையும் விட சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுடன் இந்தியா இந்த சுற்றுப்பயணத்தில் ஆடுகிறது. பும்ரா, ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் அசத்திவருகின்றர்னர். இவர்களுடன் அனுபவ பவுலர் இஷாந்த் சர்மாவும் இருக்கிறார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அருமையாக பந்துவீசி அசத்திய முகமது சிராஜ், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் ஆடிவருகிறார். முதல் டெஸ்ட்டில் ஆட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சிராஜ், நன்றாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இளம் துடிப்பான ஃபாஸ்ட் பவுலரான முகமது சிராஜ் மிகவும் ஆக்ரோஷமான பவுலராக திகழ்கிறார். பொதுவாகவே ஃபாஸ்ட் பவுலர்கள் களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். தற்போதைய இந்திய அணியே ஆக்ரோஷமாக அணியாக இருக்கிறது. அதிலும், ஃபாஸ்ட்பவுலரான முகமது சிராஜ், களத்தில் கடும் ஆக்ரோஷமாக இருக்கிறார். விக்கெட் வீழ்த்தியவுடன் பேட்ஸ்மேன்களை நோக்கி தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதுடன், அவர்களிடம் தேவையில்லாத செய்கைகளை செய்து விக்கெட் மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கூட, ஜானி பேர்ஸ்டோவை வீழ்த்திவிட்டு அவரை நோக்கி, வாயில் விரல்வைத்து செய்கை காட்டி வழியனுப்பிவைத்தார் சிராஜ்.

இந்நிலையில், இதுகுறித்து தி டெலிக்ராஃபிற்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தினேஷ் கார்த்திக், பேட்ஸ்மேனை வீழ்த்தியபோதே, அவருக்கு எதிரான போட்டியில் பவுலர் வென்றுவிடுகிறார். எனவே அப்படியிருக்கும்போது, விக்கெட் வீழ்த்திய பிறகு பேட்ஸ்மேன்களை நோக்கி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது தேவையற்றது என்று சிராஜுக்கு தினேஷ் கார்த்திக் அறிவுரை கூறியுள்ளார். சிராஜ் அவரது சர்வதேச கிரிக்கெட் கெரியரின் தொடக்கத்தில் இருப்பதால், போகப்போக இதையெல்லாம் கற்றுக்கொள்வார் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios