சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் தோனி. 2004ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடி, பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், கேப்டன் ஆகிய பரிமாணங்களில் இந்திய அணிக்காக தனது முழு பங்களிப்பையும் உழைப்பையும் கொடுத்து 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர் தோனி. 

தோனி கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் இருந்துவந்த நிலையில் நேற்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். தோனி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென ஓய்வு அறிவித்ததையடுத்து, ரசிகர்கள் உட்பட அனைத்து தரப்பினருமே அதிர்ச்சியடைந்தனர். முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் முதல் மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் தோனிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். 

இந்நிலையில், தோனியை கௌரவப்படுத்தும் விதமாக அவரது அடையாளமாக திகழும் ஜெர்சி நம்பர் 7ஐ இனிமேல் யாருக்கும் வழங்கக்கூடாது என பிசிசிஐக்கு தினேஷ் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெர்சி நம்பர் 7 என்பது வெறும் நம்பர் அல்ல. அது அது உணர்வுப்பூர்வமான விஷயம். தோனிக்கும் ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பு நம்பர் 7.

சச்சின் டெண்டுல்கரின் 10, யுவராஜ் சிங்கின் 12, தோனியின் 7, கோலியின் 18 ஆகிய ஜெர்சி எண்கள் எல்லாம் அவர்களது அடையாளம். அந்த எண்களில் எல்லாம் இனிமேல் யாரையும் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அந்தவகையில், தோனியின் ஜெர்சி நம்பர் 7ஐ இனிமேல் யாருக்கும் வழங்கக்கூடாது என பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக். தோனியின் ரசிகர்களும் இதே கோரிக்கையை விடுத்துவருகின்றனர். 2019 உலக கோப்பை அரையிறுதியில் கடைசியாக தோனியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

தோனி இல்லையென்றால், அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டியவர் தினேஷ் கார்த்திக். தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நிரந்தர இடத்தை பிடித்ததால் தான் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. தோனி அவரது திறமையின் காரணமாக அணியில் இடம்பிடித்து வளர்ந்தார் எனும் எதார்த்தத்தை புரிந்துகொண்டதால், அவர் மீது எந்தவிதமான பொறாமையும் இல்லாமல், அவரது ஜெர்சி நம்பரை இனி யாருக்கும் கொடுக்கக்கூடாது என்ற கோரிக்கையை தினேஷ் கார்த்திக் முன்வைத்துள்ளார். தினேஷ் கார்த்திக்கின் நல்ல மனது பாராட்டுக்குரியது.