இந்திய அணியில் 2004ம் ஆண்டே அறிமுகமாகிவிட்ட போதிலும் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வந்தவர் தினேஷ் கார்த்திக். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கிற்கு, அவரது சமகால வீரரான தோனியின் ஆதிக்கத்தால் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது. தனக்கான இடத்தை தோனி இறுகப்பிடித்து கொண்டதால் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. 

ஆனாலும் அவ்வப்போது அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார். அவரது நீண்டகால காத்திருப்புக்கு உலக கோப்பையில் பலன் கிடைத்தது. நடந்து முடிந்த இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டார். 

அவர் அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமலேயே இருந்தது. அவருக்கு கடைசியில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளையும் அவர் சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை. அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு, அவரது ஒட்டுமொத்த கெரியருக்கான அர்த்தத்தை சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை பயன்படுத்தி கொள்ளாமல் ஒற்றை இலக்கத்தில் தினேஷ் கார்த்திக் வெளியேறினார். 

அத்துடன் அவர் மீது அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் வைத்திருந்த நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. இதற்கு முன்னர் டி20 அணியிலாவது எடுக்கப்பட்டு கொண்டிருந்தார். நிதாஹஸ் டிராபி இறுதி போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தினேஷ் கார்த்திக்கிற்கு டி20 அணியிலாவது இடம் கிடைத்து கொண்டிருந்தது. ஆனால் உலக கோப்பையில் சொதப்பியதற்கு பின்னர் அந்த இடமும் பறிபோனது. 

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியில் தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகியோர் டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர். ஏற்கனவே தினேஷ் கார்த்திக் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில், கிடைத்த வாய்ப்பையும் வீணடித்து டி20 அணியில் கிடைத்துவந்த வாய்ப்பையும் நழுவவிட்டார். டி20 அணியிலிருந்தும் தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டிருப்பது, இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடமில்லை என்பதையே பறைசாற்றுகிறது.