முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியது. 9ம் தேதி தொடங்கி பல போட்டிகள் நடந்துவருகின்றன. அதில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான போட்டியும் ஒன்று.

விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி ஆகிய தொடர்களின் இறுதி போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள்தான் மோதின. அந்த இரண்டு இறுதி போட்டிகளிலும் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடக அணி வெற்றி பெற்ற நிலையில், ரஞ்சி தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளும் ஆடிவருகின்றன.

கடந்த 9ம் தேதி தொடங்கி திண்டுக்கல்லில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணியின் தேவ்தத் படிக்கல், பவன் தேஷ்பாண்டே மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். மயன்க் அகர்வால் 43 ரன்கள் அடித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் கர்நாடக அணி 336 ரன்களை குவித்தது. 

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, மறுமுனையில் நிலைத்து ஆடிய சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் சதமடித்து அசத்தினார். தொடக்க வீரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 81 ரன்களை சேர்த்தனர். முரளி விஜய் 32 ரன்களிலும் அபினவ் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பாபா அபரஜித் 37 ரன்களும் கேப்டன் விஜய் சங்கர் 12 ரன்களும் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின்னர் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து, அவர்களையும் வழிநடத்தி, தானும் சிறப்பாக பேட்டிங் ஆடி ஸ்கோரை உயர்த்தினார் தினேஷ் கார்த்திக். பொறுப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் சதமடித்து அணியை முன்னெடுத்து சென்றார். தினேஷ் கார்த்திக் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிய, கடைசி விக்கெட்டாக தினேஷ் கார்த்திக் 113 ரன்களில் ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 29 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் கர்நாடக அணியின் முக்கியமான வீரர்களான மயன்க் அகர்வால், கருண் நாயர்  ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 89 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. தமிழ்நாடு அணியை விட 118 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டம் முடிந்தது. 

தேவ்தத் படிக்கல்லும் ஷரத்தும் கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஷரத் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து படிக்கல்லும் ஆட்டமிழந்தார். கர்நாடக அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் அடித்துள்ளது. விரைவில் எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் தமிழ்நாடு அணிக்கு வெற்றி வாய்ப்புள்ளது.