ஐபிஎல் 12வது சீசனின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றது. 

ஐபிஎல் 12வது சீசனின் இறுதி போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியும் சிஎஸ்கே அணியும் நான்காவது முறையாக ஐபிஎல் இறுதி போட்டியில் மோதின. டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஜோடி அபாரமாக ஆடி 5 ஓவர்களில் 45 ரன்களை குவித்தது. 5வது ஓவரில் டி காக்கும் 6வது ஓவரில் ரோஹித்தும் அவுட்டாக, அதன்பின்னர் மும்பை அணியின் ரன்ரேட் மிடில் ஓவர்களில் குறைந்தது. சூர்யகுமாரும் இஷான் கிஷானும் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அடித்து ஆடவில்லை. ஆனால் பார்ட்ன்ரஷிப் வளர்ந்துகொண்டிருந்த நேரத்தில் அவர்களும் ஆட்டமிழக்க, பொல்லார்டு ஓரளவிற்கு அடித்து ஆடி 25 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். 

20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் அடித்தது. 150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க ஜோடி அபாரமாக ஆடியது. எனினும் அதிரடியாக ஆடிய டுபிளெசிஸை நிலைக்கவிடாமல் 26 ரன்களில் க்ருணல் பாண்டியா வெளியேற்றினார். அதன்பின்னர் ரெய்னா, ராயுடு, தோனி என சிஎஸ்கே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 

தோனியின் ரன் அவுட்டுக்கு பின்னர் தான் மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டத்திற்குள் வந்தது. அதுவரை ஆட்டம் சிஎஸ்கே வசமே இருந்தது. விரட்ட வேண்டிய இலக்கு எளிதுதான் என்பதால் ஆட்டம் சிஎஸ்கேவிற்கு சாதமாகவே இருந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் வாட்சன் களத்தில் நிலைத்து நின்றார். 

மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட்டுகளை வீழ்த்தினால் தான் வெல்லமுடியும் என்ற சூழலில் இருந்த நிலையில், முக்கியமான விக்கெட்டான தோனியின் விக்கெட் விழுந்தது. யாருமே எதிர்பார்த்திராத வகையில் தோனி ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். 13வது ஓவரின் 5வது பந்தை வாட்சன் அடிக்க, அதை பிடித்த மலிங்கா, ரன் ஓடி முடிக்கப்பட்ட பின்னர் தேவையில்லாமல் ஓவர் த்ரோ விட்டார். அதை லாங் ஆஃப் திசையில் இருந்த இஷான் கிஷான் ஓடிவந்து பிடித்து நேரடியாக ஸ்டம்பில் அடித்தார். 

அது ரன் அவுட்டா இல்லையா என்பதை அறிவது அம்பயருக்கே பெரும் சவாலாக இருந்தது. பந்தை ஸ்டம்பை அடிக்கும் அதே நொடியில் தோனி கிரீஸுக்குள் நுழைந்தார். இதுமாதிரியான சம்பவங்களில் அதற்கு அவுட் தான் கொடுக்கப்படும். அந்தவகையில் நீண்ட ஆழமான ஆராய்ச்சிக்கு பிறகு தேர்டு அம்பயர் அவுட் கொடுத்தார். தோனி அவுட்டாகும்போது 13வது ஓவரில் சிஎஸ்கே அணி 82 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் 7 ஓவர்களுக்கு 68 ரன்கள் என அடிக்கக்கூடிய வகையில் தான் இருந்தது. 

ஆனாலும் பும்ரா, ராகுல் சாஹர், மலிங்கா ஆகியோரின் அபாரமான பவுலிங்கால் சிஎஸ்கே அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி அடைந்தது. ஒருவேளை தோனி ரன் அவுட்டாகாவிட்டால் சிஎஸ்கே வென்றிருக்கும். தோனியின் விக்கெட் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. 

இதுபோன்ற போட்டிகளில் தனி ஒருவனாகவே தோனி அடித்து வெற்றி பெற வைப்பார். இந்த போட்டியிலோ மறுமுனையில் வாட்சன் வேறு நின்றார். எனவே தோனி எளிதாக இந்த இலக்கை விரட்டியிருப்பார். ஆனால் இஷான் கிஷானின் அபாரமான த்ரோ தான் போட்டியை தலைகீழாக மாற்றிவிட்டது. இது அவுட்டா இல்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அது அவுட்டுதான். அதில் சர்ச்சை எதுவும் கிடையாது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் கூட இதேபோன்ற சம்பவங்களில் அவுட் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பந்தை ஸ்டம்பை அடிக்கும் அதே நொடியில் பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் நுழைந்தால், அதற்கு அவுட் தான் கொடுக்கப்படும்.