விறுவிறுப்பாக நடந்துவரும் ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது. பிளே ஆஃப் சுற்று வரும் 7ம் தேதி தொடங்குகிறது. 

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டன. எஞ்சிய ஒரு இடத்திற்கு சன்ரைசர்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளாக திகழும் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான். இந்த இரண்டு அணிகளும்தான் இந்த சீசனில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடிவருகிறது. சிஎஸ்கே அணி வெற்றிகளை குவித்துவருவதோடு மட்டுமல்லாமல் தோனி செம ஃபார்மில் இருக்கிறார். 

கடந்த சீசனில் அபாரமாக ஆடிய தோனி, இந்த சீசனிலும் மிரட்டலாக பேட்டிங் ஆடிவருகிறார். உலகின் சிறந்த ஃபினிஷர்களில் தோனியும் ஒருவர் என்பதில் அனைவருக்கும் தெரியும். தோனி தான் ஐபிஎல்லில் நம்பர் 1 ஃபினிஷர் என்பது கீழ்க்கண்ட புள்ளிவிவரத்தை பார்த்தால் தெரியும். 

ஐபிஎல்லில் இதுவரை கடைசி ஓவரில் 227 பந்துகளை எதிர்கொண்டு 554 ரன்களை குவித்துள்ளார். இந்த சீசனில் இதுவரை கடைசி ஓவர்களில் 21 பந்துகளை எதிர்கொண்டு 70 ரன்களை குவித்துள்ளார் தோனி. தோனிக்கு அடுத்துதான் பொல்லார்டு, ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

பொல்லார்டு கடைசி ஓவர்களில் 129 பந்துகளை எதிர்கொண்டு 21 சிக்ஸர்களுடன் 272 ரன்களை குவித்துள்ளார். இந்த பட்டியலில் தோனி, பொல்லார்டு ஆகிய பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த இடத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா உள்ளார். ரோஹித் சர்மா, 88 பந்துகளை எதிர்கொண்டு 23 சிக்ஸர்களுடன் 248 ரன்களை குவித்துள்ளார். ரோஹித் சர்மா ஐபிஎல்லில் பல சீசன்களில் பின்வரிசை வீரராக இறங்கியுள்ளார். அதனால்தான் அவரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.