மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். 2004ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய தோனி 10 ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக இருந்து, இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன். இந்த சாதனைக்கு சொந்தக்காரரான ஒரே கேப்டனும் தோனி தான். 

பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அனைத்துவகையிலும் தனது மிகச்சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்கியவர். ஆனாலும் கேப்டன்சி தான் தோனியின் அடையாளமாக திகழ்கிறது. எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழல்களையும் பதற்றமடையாமல், நிதானமாக எதிர்கொள்வது, வீரர்களை கையாள்வது, கள வியூகம், போட்டியின் போக்கை கணிப்பது, உள்ளுணர்வின் படி செயல்படுவது, இளம் வீரர்களுக்கு சரியான வழியையும் ஆலோசனையையும் கொடுத்து வளர்த்துவிடுவது என ஒரு மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. 

2007ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி, லீக் சுற்றிலேயே தோற்று வெளியேறியதையடுத்து, ராகுல் டிராவிட் கேப்டன்சியிலிருந்து விலகினார். அதன்பின்னர் தோனி இந்திய அணியின் கேப்டன் ஆனார். தோனி கேப்டன் ஆனதும் நடந்த மிகப்பெரிய தொடரான டி20 உலக கோப்பையை வென்ற தோனி, அதன்பின்னர் 2011 ஒருநாள் உலக கோப்பைக்கான அணியை தயார் செய்தார். தோனி தனது கெரியரில் ஒரு கேப்டனாக அணியின் நலன் கருதி, துணிச்சலான சில முடிவுகளை எடுத்தார். அப்படி தோனி எடுத்த துணிச்சலான, அதிரடி முடிவுகள் இந்திய அணிக்கு நல்ல முடிவை பெற்று தந்தன. 

தோனி எடுத்த சில முடிவுகள், பொதுப்பார்வையிலிருந்து வித்தியாசப்பட்ட மற்றும் ரிஸ்க் எடுக்கும் ரகம். அப்படியான 3 துணிச்சலான, அதிரடி முடிவுகளை பார்ப்போம். 

1. 2007 டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில், பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த கடைசி ஓவரை ஜோஹிந்தர் சர்மாவை வீசவைத்தார் தோனி. அணியின் சீனியர் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கிடம் கொடுக்காமல், தோனி ஜோஹிந்தர் சர்மாவிடம் கொடுத்தார். ஹர்பஜன் சிங் வீசிய 17வது ஓவரில் மிஸ்பா உல் ஹக் 2 சிக்ஸர்கள் விளாசினார். ஹர்பஜன் சிங்கின் பவுலிங்கை அவர் எளிதாக அடித்து ஆடியதால், அவரிடம் கொடுக்காமல் ஜோஹிந்தர் சர்மாவிடம் தோனி கொடுத்தார். ஹர்பஜன் சிங் சீனியர் பவுலர் என்பதற்காக கண்மூடித்தனமாக அவரிடம் கொடுக்காமல், அந்த சூழலுக்கு ஏற்பவும், பேட்ஸ்மேனின் பலத்தை அறிந்தும், அதற்கேற்ப முடிவெடுத்தார் தோனி. 

ஜோஹிந்தர் சர்மாவும் அந்த ஓவரை சிறப்பாக வீசி மிஸ்பா உல் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். தோனி அணியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இப்படி எடுக்கும் முடிவுகள் அணிக்கு பாசிட்டிவான முடிவை பெற்றுத்தந்துள்ளது. அதேவேளையில் எதிர்மறையான முடிவை பெற்றிருந்தால், தோனியின் இந்த முடிவு கடும் விமர்சனத்தை சந்தித்திருக்கக்கூடும். 

2. 2008ல் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான அணியில், சீனியர் வீரர்களும் தனது முன்னாள் கேப்டன்களுமான கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரையும் அணியிலிருந்து அதிரடியாக நீக்கினார் தோனி. 2011 உலக கோப்பைக்கான அணியை உருவாக்கும் முயற்சியில் இருந்த தோனி, ஃபீல்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். நல்ல பேட்ஸ்மேன்களாக இருந்தாலும், ஃபீல்டிங் நன்றாக செய்பவர்கள் மட்டுமே அணியில் இருக்கமுடியும் என்ற சூழலை உருவாக்கினார். அதற்கான பலனையும் கண்டார். அந்தவகையில், ஃபீல்டிங் சரியில்லை என்பதை காரணம் காட்டி, கங்குலி மற்றும் ராகுல் டிராவிட்டை அணியிலிருந்து நீக்கினார் தோனி. இது மிகக்கடுமையான முடிவு. ஆனால் தனது முடிவு சரிதான் என்பதை தோனி ஒரு கேப்டனாக வெற்றிகளை குவித்து நியாயப்படுத்தி காட்டினார். அதுமட்டுமல்லாமல் தோனியின் கேப்டன்சியில் தான் இந்திய அணி, ஃபீல்டிங்கில் சிறந்து விளங்க தொடங்கியது.

3. 2011 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில், கோலி அவுட்டானதும், 5ம் வரிசையில் இறங்கி, 4வது விக்கெட்டுக்கு கம்பீருடன் ஜோடி சேர்ந்தார் தோனி. அந்த உலக கோப்பை தொடர் முழுவதுமே செம ஃபார்மில் மிகச்சிறப்பாக ஆடி, இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த யுவராஜ் சிங்கை இறக்காமல், தோனி அந்த வரிசையில் இறங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் தோனி தனது முடிவை சரியென நிரூபிக்கும் விதமாக சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். ஒருவேளை தோனி அதை செய்ய தவறி, இந்திய அணி தோற்றிருந்தால், தோனியின் முடிவு கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும். இப்படித்தான் இருக்கும் தோனியின் முடிவு...