இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓய்வும் அறிவிக்காமல், இந்திய அணியிலும் ஆடாமல் வாளாதிருந்தார் தோனி. 

தனது எதிர்கால திட்டம் குறித்து என்ன ஐடியா வைத்திருக்கிறார் என்று அவருக்குத்தான் தெரியும். தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் கூட, உலக கோப்பைக்கு பின்னர் அவர் இந்திய அணியில் எடுக்கப்படவேயில்லை. 6 மாதமாக எந்த போட்டியிலும் ஆடாததால், 2020ம் ஆண்டுக்கான பிசிசிஐ-யின் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயரே இடம்பெறவில்லை. 

தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் கூட, அவரது கெரியர் முடிந்துவிட்டது என்பதே உண்மை. இந்திய அணி நிர்வாகம், அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நடைபோட்டு கொண்டிருக்கிறது. ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடினால், இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுவிட முடியும் என நம்பும் தோனி, ஐபிஎல்லுக்கான பயிற்சியை மற்ற வீரர்களுக்கு முன்பே தொடங்குகிறார். 

ஐபிஎல் 13வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. லீக் போட்டிகள் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 17ம் தேதி வரை நடக்கவுள்ளது. மார்ச் 29ம் தேதி நடக்கும் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. 

இந்நிலையில், தோனி மார்ச் ஒன்றாம் தேதி சென்னைக்கு வந்து பயிற்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் இறுதியில் தான் ஐபிஎல் தொடங்கவுள்ளது. ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பே தோனி பயிற்சியை தொடங்குகிறார். எனவே ஐபிஎல்லில் எதிரணிகளின் பவுலிங்கை பிரித்து மேய்வதில் உறுதியாக இருக்கிறார் தோனி. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல்லில் அசத்தலாக ஆடி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறும் முனைப்பில் இருக்கிறார். 

எனவே ஒரு மாதத்திற்கு முன்பாகவே பயிற்சியை தொடங்குகிறார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பைக்கு பின் தோனி ஆடவேயில்லை. எனவே எட்டரை மாதங்களுக்கு பிறகு பேட்டை பிடித்து, பயிற்சி செய்யவுள்ளார் தோனி. தோனி ஐபிஎல்லுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பயிற்சியை தொடங்குவதால் சிஎஸ்கே ரசிகர்கள் பேராவலாக உள்ளனர். சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தோனியை காணலாம்.