இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் ஓய்வை பற்றி சற்றும் யோசிக்காத தோனி, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து ஒதுங்கினார். 

இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்கும் பணியை இந்திய அணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால், தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அதை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தே வெளிப்படையாக தெரிவித்திருந்தார். 

அதனால் தோனிக்கு ஃபேர்வெல் போட்டி மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு தொடருக்குமான இந்திய அணி அறிவிக்கப்படும் முன், தோனியுடனான தனது ஏதாவது ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கேப்டன் கோலி டுவீட் செய்வதால், தோனி அணியில் இடம்பெறுவாரோ என்ற சந்தேகமும் விவாதமும் எழுந்துவிடுகிறது. 

இந்நிலையில், இந்திய அணியில் இனிமேல் ஆட வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ? ஆனால் தோனியை மீண்டும் களத்தில் காண ஒரு வாய்ப்பு கிடைக்கப்போகிறது. தோனியின் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

வங்கதேச கிரிக்கெட் வாரியம், ஆசிய அணிகளின் லெவன் vs உலக லெவன் அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகளை நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த போட்டிகளில், ஆசியா லெவன் அணியில் 7 இந்திய வீரர்களை ஆடவைக்க திட்டமிட்டுள்ளது. அதில் தோனியும் ஒருவர். அதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) மற்றும் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியத்திடமும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிசாமுதீன் சௌத்ரி தெரிவித்துள்ளார். 

தோனியை தவிர மற்ற 6 இந்திய வீரர்களாக விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார் ஆகியோரை இறக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.