இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. 

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை குவித்திருந்தது. 3 விக்கெட் விழுந்தபிறகு ராகுலுடன் தோனி ஜோடி சேர்ந்தார். அபாரமாக ஆடி அரைசதமடித்த ராகுலின் விக்கெட் விழுந்தபிறகு இந்திய அணியின் ரன்ரேட் சரிய தொடங்கியது. தோனி கடைசிவரை களத்தில் நின்றும்கூட ரன்ரேட்டை மீட்டெடுக்கவே முடியவில்லை. 

தோனியை டெத் ஓவர்களில் அடிக்கவிடாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் கட்டுப்படுத்தினர். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தது. தோனி 37 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 29 ரன்களை மட்டுமே எடுத்தார். நிறைய சிங்கிள்களை ஓடாமல் தவிர்த்தார் தோனி. அதுதான் அந்த போட்டியில் இரு அணிகளுக்கு இடையேயான வித்தியாசமாக அமைந்தது. 

இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. சின்னசாமி மைதானம் அளவில் சிறியது மட்டுமல்லாமல் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம்.

அதுமட்டுமல்லாமல் பெங்களூரு சின்னசாமி மைதானம் தோனியின் கோட்டை என்றே கூறலாம். அந்தளவிற்கு அங்கு சிறப்பாக ஆடி ரன்களை குவித்துள்ளார். அந்த மைதானத்தில் 17 டி20 போட்டிகளில் ஆடி 536 ரன்களை குவித்துள்ளார் தோனி. இதுதான், ஒரு மைதானத்தில் தோனி அடித்துள்ள இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். 

அந்த வகையில், பெங்களூரு சின்னசாமி மைதானம் தோனியின் கோட்டை என்பதால், இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு தோனி பெரும் தலைவலியாக இருப்பார். அதிலும் முதல் போட்டியில் சரியாக ஆடாததால் அந்த ஆதங்கத்திலும் வேகத்திலும் இருக்கும் தோனி, இந்த போட்டியில் அடித்து நொறுக்கும் முனைப்பில் இருப்பார். அதிலும் அவரது சிறந்த ஆட்டங்களை ஆடியுள்ள மைதானம் என்பதால் தோனியிடமிருந்து பெரிதாகவே எதிர்பார்க்கலாம்.