தோனியை இந்திய கிரிக்கெட்டின் அத்தியாயம் என்றே கூறலாம். கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, 2007ம் ஆண்டே இந்திய அணியின் கேப்டன் ஆனார். 

இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. 2007 டி20 உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி, 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை என மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்றுகொடுத்தார். இதுவரை அனைத்துவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான். 

கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து ஒதுங்கிய தோனி, 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன்சியில் இருந்தும் விலகினார். அதன்பிறகு விராட் கோலியின் கேப்டன்சியில் அணியில் சீனியர் வீரராக ஆடிவருகிறார். 

தோனி ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் சரியாக ஆடாததால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுவந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து ஃபார்முக்கு வந்து மிரட்டினார். உலக கோப்பையில் தோனி ஆடிவருகிறார். 

தோனி ஃபார்மில் இல்லாத போதெல்லாம் அவரது வயதை சுட்டிக்காட்டி ஓய்வுபெற வேண்டும் என்ற வலியுறுத்தல்களையும் குரல்களையும் ரசிகர்களும் நெட்டிசன்களும் எழுப்பிவருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு சரிவிலிருந்தும் மீண்டெழுந்து மீண்டும் விஸ்வரூபம் எடுப்பவர் தோனி. 

உலக கோப்பையில் தோனியின் மந்தமான பேட்டிங் விமர்சனத்துக்கு உள்ளாகிவரும் நிலையில், அவருக்கு ஆதரவாக கேப்டன் கோலி குரல் கொடுத்திருந்தார். இந்த உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என்ற கருத்து உள்ளது. தோனியின் ஓய்வு முடிவை அவர்தான் எடுப்பார். எனினும் அவர் கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை திடீரென தான் அறிவித்தார். அதனால் அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்வார் என்பதை கணிப்பது கடினம். கேப்டன்சியில் இருந்து விலகியதை போலவே ஓய்வு முடிவையும் திடீரென அறிவிக்கக்கூடும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு எதிரான போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இதுகுறித்து தோனியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நான் எப்பொழுது ஓய்வு பெறுவேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் பலர், நான் இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்னதாகவே ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.