ஐபிஎல் 12வது சீசனின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணியை எளிதாக வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின. முதல் இரண்டு இடங்களில் இருந்த மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் நேற்று மோதின. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி வீரர்களை தொடக்கம் முதலே ரன் குவிக்க விடாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினர் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள். டுபிளெசிஸ், ரெய்னா, வாட்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஓரளவிற்கு நன்றாக ஆடிய முரளி விஜயை 26 ரன்களில் ராகுல் சாஹர் வீழ்த்தினார். 

அதன்பின்னர் தோனியும் ராயுடுவும் சேர்ந்து ஓரளவிற்கு அடித்து ஆடி ரன்களை சேர்த்தனர். அதிலும் கடைசி ஓவரை பும்ரா வீசியதால் அந்த ஓவரில் தோனி களத்தில் இருந்தும் கூட பெரிய ஷாட்டுகளை ஆடமுடியவில்லை. 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி வெறும் 131 ரன்களை மட்டுமே எடுத்தது. 132 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலேயே எட்டி எளிதாக வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 

சேப்பாக்கம் ஆடுகளம் வழக்கம்போலவே இந்த சீசனிலும் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது. இந்த சீசன் முழுவதுமே ஸ்பின் பவுலர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தினர். நேற்றைய போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் ஸ்பின்னர்கள் ராகுல் சாஹர், க்ருணல் பாண்டியா மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகிய மூவரின் பவுலிங்கும் நன்றாக திரும்பியது. அதனால் அதை ஊகித்து ஆட சிஎஸ்கே வீரர்கள் திணறினர். 

இவர்களுடன் சேர்ந்து பும்ராவும் அபாரமாக வீச, சிஎஸ்கே அணியை வெறும் 131 ரன்களுக்கு சுருட்டியது மும்பை இந்தியன்ஸ். சேப்பாக்கம் ஆடுகளத்தின் கண்டிஷனுக்கு கூடுதலாக 20 ரன்கள் அடித்து 150 ரன்களை சிஎஸ்கே அணி சேர்த்திருக்குமேயானால், சிஎஸ்கேவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஏனெனில் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ஜடேஜா என சிஎஸ்கேவிலும் தரமான ஸ்பின்னர்கள் இருந்தனர். ஆனால் இலக்கு மிகவும் குறைவு என்பதால் அதை சிரமப்படாமல் நெருக்கடியில்லாமல் எளிதாக எட்டியது மும்பை இந்தியன்ஸ். 

தோல்விக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, ஆடுகளத்தின் தன்மையை பேட்ஸ்மேன்கள் கணிக்க தவறியதை காட்டமாக கண்டித்தார். நாம் இந்த மைதானத்தில் 6-7 போட்டிகளில் ஆடியிருக்கிறோம். அப்படியிருக்கையில் ஆடுகளத்தின் தன்மையை பேட்ஸ்மேன்கள் கணித்திருக்க வேண்டும். பந்து பேட்டிற்கு வருகிறதா? எளிதாக ரன் சேர்க்க முடிகிறதா? இந்த ஆடுகளத்திற்கு எது நல்ல ஸ்கோர்? என்பதை எல்லாம் கணிக்க வேண்டும். எங்கள் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கினோம். இவர்கள் தான் எங்கள் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள். நல்ல அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களும் கூட. ஆனால் அவர்கள் ஆடுகளத்தின் தன்மையை சரியாக மதிப்பீடு செய்து ஆடியிருக்க வேண்டும். இனிவரும் போட்டிகளில் அதை செய்வார்கள் என்று நம்புவதாக தோனி தெரிவித்தார்.