இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வீரருமான தோனியின் கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டது. உலக கோப்பையுடன் அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது ஓய்வு குறித்த விவாதம் ஹாட் டாபிக்கான நிலையிலும் அமைதி காத்துவருகிறார் தோனி.

தோனி ஓய்வு அறிவித்தாலும் அறிவிக்கவில்லையென்றாலும் அவரது கெரியர் முடிந்துவிட்டது. இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். தோனி கடைசியாக ஃபேர்வெல் போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி அவரது கெரியர் ஓவர். 

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஒரு அதிரடி முன்னெடுப்பால் தோனி வர்ணனையாளராகவுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டனில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. இந்திய அணி ஆடவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இது. அதனால் வரலாற்று சிறப்புமிக்க அந்த போட்டியின் சுவாரஸ்யத்தை கூட்டும் விதமாக அதை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை முன்னெடுக்கிறது. 

அந்த போட்டியின் முதல் இரண்டு நாட்கள் ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் அனைவரையும் வர்ணனையில் ஈடுபட வைக்க விரும்புகிறது. இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியின் ஆதரவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நாடியுள்ளது. அவரிடம் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளது. அந்த போட்டியின் முதல் 2 நாட்களில், முன்னாள் கேப்டன்களை வர்ணனை செய்யவைப்பதோடு, அவர்களது டெஸ்ட் அனுபவம் குறித்தும் முக்கியமான மற்றும் மறக்கமுடியாத போட்டிகள் குறித்தும் விவாதிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.