உலக கோப்பை நெருங்கிய நிலையில் தோனி சிறந்த ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். 

ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் திணறிவந்த தோனி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த தொடரில் அபாரமாக ஆடி ஹாட்ரிக் அரைசதம் அடித்து தொடர்நாயகன் விருதை வென்றார். அதன்பின்னர் நியூசிலாந்து தொடர், மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், ஐபிஎல் என தொடர்ந்து பேட்டிங்கில் மிரட்டிவருகிறார். 

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிட்டது. இந்த சீசனில் பல போட்டிகளில் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி மிரட்டினார் தோனி. டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த தோனி, டெத் ஓவர்களில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டிவிட்டார். 22 பந்துகளில் 44 ரன்களை குவித்தார் தோனி. 

கடைசி ஓவர்களில் ரன்களை குவிப்பதில் தோனிக்கு நிகர் தோனிதான். ஐபிஎல்லில் இதுவரை கடைசி ஓவரில் 227 பந்துகளை எதிர்கொண்டு 554 ரன்களை குவித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சீசனில் இதுவரை கடைசி ஓவர்களில் 21 பந்துகளை எதிர்கொண்டு 70 ரன்களை குவித்துள்ளார் தோனி. 

இவ்வாறு கடைசி ஓவரில் தோனி செம காட்டு காட்டிவரும் நிலையில், கடைசி ஓவர் அதிரடி ரகசியத்தை தோனி பகிர்ந்துள்ளார். டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, பந்தைப் பார்.. அடி என்பதுதான் கடைசி ஓவர்களில் பேட்டிங் ஆடும்போது எனது பேட்டிங் உத்தி. பொதுவாக களத்திற்கு புதிதாக வந்த பேட்ஸ்மேனைவிட களத்தில் நின்று 20 பந்துகளை சந்தித்த வீரருக்கு கடைசி ஓவரில் அடித்து ஆடுவது எளிதாக இருக்கும். அதனால்தான் கடைசி ஓவரில் சிங்கிள் அழைத்தேன். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ரன் அவுட் செய்ய ஏதுவாக க்ளௌசை கழட்டாமல் இருந்தது எங்களுக்கு உதவிகரமாக இருந்தது என தோனி தெரிவித்தார்.