சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் தோனியின் மிரட்டலான ஃபினிஷிங்கால் 20 ஓவர் முடிவில் 179 ரன்களை குவித்தது. 

180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் வரிசையை இம்ரான் தாஹிரும் ஜடேஜாவும் இணைந்து சரித்துவிட்டனர். சிஎஸ்கே ஸ்பின்னர்களின் அபாரமான பவுலிங் மற்றும் தோனியின் அசத்தலான விக்கெட் கீப்பிங்கால் டெல்லி அணி வெறும் 99 ரன்களுக்கே சுருண்டது. இதையடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

இந்த போட்டியில் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடிய தோனி, அணியின் ஸ்கோரை 179 ஆக உயர்த்தினார். டிரெண்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் அடிக்கப்பட்டன. தோனி அந்த ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை 2 முறை வைடாக வீசினார் போல்ட். இரண்டாவது முறை வைடு வீசும்போது ராயுடு பந்தை அடிக்காமல் இருந்தபோதும் தோனி ரன் ஓடி பேட்டிங் முனைக்கு சென்றார். அந்த பந்தை பிடித்து ரிஷப் பண்ட்டால் ரன் அவுட் செய்ய முடியவில்லை. அந்த ரன்னுக்கு அடுத்துதான், கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர் விளாசினார் தோனி. 

போட்டிக்கு பின்னர் இதுகுறித்து பேசிய தோனி, பந்தைப் பார்.. அடி என்பதுதான் கடைசி ஓவர்களில் பேட்டிங் ஆடும்போது எனது பேட்டிங் உத்தி. பொதுவாக களத்திற்கு புதிதாக வந்த பேட்ஸ்மேனைவிட களத்தில் நின்று 20 பந்துகளை சந்தித்த வீரருக்கு கடைசி ஓவரில் அடித்து ஆடுவது எளிதாக இருக்கும். அதனால்தான் கடைசி ஓவரில் சிங்கிள் அழைத்தேன். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ரன் அவுட் செய்ய ஏதுவாக க்ளௌசை கழட்டாமல் இருந்தது வசதியாக இருந்தது. அந்த சிங்கிள் ஓட ரிஷப் பண்ட் தான் உதவினார் என்று தோனி தெரிவித்தார்.