தோனி களத்தில் பெரும்பாலும் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தமாட்டார். கோபமோ, பதற்றமோ, மகிழ்ச்சியோ எதையுமே பெரியளவில் காட்டிக்கொள்ளாமல் நிதானமாகவே இருப்பார். அதனால் தான் அவரை ரசிகர்கள் கேப்டன் கூல் என்று அழைக்கின்றனர். 

களத்தில் மட்டுமல்ல; களத்திற்கு வெளியேயும் தோனி அப்படித்தான். ஊடகங்களை கையாள்வதாகட்டும், தன்னை விமர்சிப்பவர்கள் மற்றும் தன்னை வெறுப்பவர்களுக்கு ரியாக்ட் செய்யும் விதமாகட்டும் எல்லாமே தனித்துவமாக இருக்கும். 

எப்பேர்ப்பட்ட சாதனையாளர்களாக இருந்தாலும், அவர்களை பிடித்த ஒரு கூட்டம் இருக்கிறதென்றால், பிடிக்காத ஒரு கூட்டம் கண்டிப்பாக இருக்கும். அந்தவகையில், தோனி இந்திய கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பை அளித்த போதிலும், அவரை பிடிக்காதவர்கள் இருக்கவே செய்கிறார்கள். தோனி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்த 2012ல் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பார்ப்போம்.

தோனியை டுவிட்டரில் பின் தொடரும் நபர் ஒருவர், தோனியை பலருக்கு பிடிக்காது என்பது அவருக்கே தெரிந்திருக்கும். அப்படி தோனியை வெறுப்பவர்களில் நானும் ஒருவன் என்று பதிவிட்டிருந்தார். 

அதற்கு, அவர் மீது வெறுப்பையோ, கோபத்தையோ காட்டாமல், நாசூக்காக தனது பாணியிலேயே பதிலடி கொடுத்தார் தோனி. “உங்களுக்கு என்னை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதற்காக வெறுக்கிறேன் என்பது ரொம்ப கடுமையான வார்த்தை. அது உங்கள் வார்த்தை தேர்வு. இதை நான் தவறென்றோ புகாராகவோ சொல்லமாட்டேன் என்று அந்த நபரின் வெறுப்புணர்ச்சிக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டிருந்தார்.