நவ்ஜோத் சிங் சித்து, கங்குலி, சேவாக், யுவராஜ் சிங் ஆகியோரை தொடர்ந்து இந்திய அணியில் சிக்ஸர்கள் அடிப்பதற்கு பெயர்போனவர் தோனி. தோனிக்கு பிறகு தற்போதைய இந்திய அணியில் சிக்ஸர்களை விளாசுவதில் வல்லவர் ரோஹித் சர்மா. 

மேற்கூறிய அனைவரை காட்டிலும் அசால்ட்டாக சிக்ஸர்கள் விளாசுவதில் கில்லாடி ரோஹித் சர்மாதான். மிகக்குறைந்த இன்னிங்ஸ்களிலேயே அதிக சிக்ஸர்கள் விளாசியுள்ளார் ரோஹித் சர்மா. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் 5 இடங்களுக்குள் இருக்கிறார். 

202 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ரோஹித் சர்மா 215 சிக்ஸர்களை விளாசி ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரராக திகழ்ந்தார். இதற்கு முன்னதாக தோனிதான் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரராக திகழ்ந்தார். 215 சிக்ஸர்களுடன் தோனியை அண்மையில் சமன் செய்தார் ரோஹித். 

ஆனால் நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஒரு சிக்ஸர் விளாசிய தோனி, 216 சிக்ஸர்களுடன் ரோஹித்தை முந்தி முதலிடம் பிடித்தார். தோனி 336 ஒருநாள் போட்டிகளில் ஆடி 216 சிக்ஸர்களை அடித்துள்ளார். 

தோனி கிரிக்கெட் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். அதனால் ரோஹித் சர்மாதான் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆனால் தோனி ஆடும் வரையிலும் ரோஹித் - தோனி இருவருக்கும் இடையேயான போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:

தோனி - 216 சிக்ஸர்கள்

ரோஹித் சர்மா - 215 சிக்ஸர்கள்

சச்சின் டெண்டுல்கர் - 195 சிக்ஸர்கள்

கங்குலி - 189 சிக்ஸர்கள்

யுவராஜ் சிங் - 153 சிக்ஸர்கள்

சேவாக் - 131 சிக்ஸர்கள்