ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

தலா 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் பரம எதிரி அணிகள். இரு அணிகளும் மோதும் போட்டி மற்ற போட்டிகளை காட்டிலும் பரபரப்பாக இருக்கும். 

மற்ற அனைத்து அணிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்தி ஆடும் சிஎஸ்கே அணியால் மும்பை அணியின் மீது ஆதிக்கம் செலுத்தவே முடியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற 3 ஐபிஎல் கோப்பைகளில் 2 சிஎஸ்கேவை இறுதி போட்டியில் வீழ்த்தி வெல்லப்பட்டதாகும். 

அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியை தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வீழ்த்திய ஒரே அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் நிகழ்த்தியுள்ளது. நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் அந்த அணியிடம் சிஎஸ்கே தோற்றது தொடர்ச்சியாக நான்காவது தோல்வி. 

லீக் சுற்றில் இரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸிடம் சிஎஸ்கே தோற்றது. இதையும் சிஎஸ்கேவின் முந்தைய தோல்விகளையும் மனதில் வைத்துக்கொண்டு, நேற்றைய போட்டியில் டாஸ் போடும்போது வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர், தோனியிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு தோனி சாமர்த்தியமாக பதிலளித்துவிட்டார். 

சிஎஸ்கே அணி மற்ற எதிரணிகளை விட மும்பை இந்தியன்ஸுக்கு அதிக மதிப்பளிக்கிறதா என்று சஞ்சய் கேட்டார். அதற்கு, ஐபிஎல்லில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அனைத்து எதிரணிகளுக்குமே சமமான மதிப்பு கொடுத்து ஆடினால்தான் வெல்ல முடியும். அதனால் மும்பை இந்தியன்ஸுக்கு மட்டும் கூடுதல் மதிப்பளித்தால் அது மிகப்பெரிய தவறு என்று தோனி தெரிவித்துவிட்டார். 

மும்பை அணியின் கெத்தை ஏற்றிவிடும் விதமாக சஞ்சய் மஞ்சரேக்கர் கேட்ட கேள்விக்கு சாமர்த்தியமாகவும் தெளிவாகவும் உண்மையான பதிலை அளித்துவிட்டார் தோனி.