தோனி பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், கேப்டன் ஆகிய மூன்று விதத்தில் இந்திய கிரிக்கெட்டிற்கு மிகச்சிறந்த பங்காற்றி வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார். குறிப்பாக விக்கெட் கீப்பிங்கில் தனது முத்திரையை பதித்து தனக்கென தனி இடம் பிடித்தார் தோனி. 

சர்வதேச கிரிக்கெட்டில் தோனி மொத்தம் 195 ஸ்டம்பிங் செய்துள்ளார். இதன்மூலம் அதிகமான ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். மார்க் பவுச்சர், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய விக்கெட் கீப்பிங் ஜாம்பவான்களை விட அதிகமான ஸ்டம்பிங் செய்தவர் தோனி தான். 

இந்திய அணி பல நேரங்களில் எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் திணறியபோது, தனது மின்னல்வேக ஸ்டம்பிங்கால் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் தோனி. அந்தவகையில், தோனியின் கெரியரில் அவர் செய்த சில மின்னல் வேக ஸ்டம்பிங்கை பார்ப்போம். 

1. இந்தியா - நியூசிலாந்து இடையே 2019ல் நியூசிலாந்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஸ் டெய்லரை தோனி செய்த ஸ்டம்பிங் தான், அவரது கெரியரில் அவர் செய்த மிகச்சிறந்த ஸ்டம்பிங் என்று கூறலாம். ஏனெனில் அவரது மின்னல் வேக ஸ்டம்பிங்கால், தேர்டு அம்பயரே முடிவெடுக்க முடியாமல் திணறினார்.

கேதர் ஜாதவ் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தை ஆடிய டெய்லர், ஃபிரண்ட்ஃபூட் ஆடியபோது, பேலன்ஸ் கிடைக்காமல் லேசாக காலை தூக்கினார். ஆனால் பேலன்ஸுக்காக தூக்கியதால் உடனடியாக கீழே வைத்துவிட்டார். ஆனால் காலைத்தூக்கி மீண்டும் ஊன்றுவதற்கு இடையேயான மிகக்குறைந்த இடைவெளியில் மிகவும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் ஸ்டம்பிங் செய்தார் தோனி. 

இந்த ஸ்டம்பிங்கை மூன்றாவது அம்பயரை ஆய்வு செய்ய கள அம்பயர் பரிந்துரைத்ததை அடுத்து மூன்றாவது அம்பயர் அதை ஆய்வு செய்தார். மிகவும் நுணுக்கமான அந்த ஸ்டம்பிங் மூன்றாவது அம்பயரை உடனடியாக முடிவெடுக்க முடியாமல் செய்தது. நன்றாக ஸூம் செய்து பார்த்து நீண்ட நேர ஆய்விற்கு பிறகு அதை அவுட் என அறிவித்தார் மூன்றாவது அம்பயர். 

2. மற்றொரு மிகச்சிறந்த ஸ்டம்பிங் என்றால், 2019 ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் மோரிஸை செய்த ஸ்டம்பிங். இது ஏன் அவ்வளவு ஸ்பெஷல் என்றால், இதுவும் முதல் ஸ்டம்பிங்கை போலத்தான். மோரிஸ் காலை க்ரீஸை விட்டு வெளியே எடுக்கவில்லை. பேலன்ஸ் மிஸ்ஸாகி கொஞ்சம் தூக்கினார். ஆனால் தூக்கிய காலை கீழே வைப்பதற்குள் மின்னல் வேகத்தில் தோனி தனது வேலையை காட்டினார்.