ஐபிஎல் வரலாற்றில் நேற்றைய இறுதி போட்டி, சிஎஸ்கேவின் 8வது இறுதிப்போட்டி. இதுவரை 10 சீசன்களில் ஆடியுள்ள சிஎஸ்கே(இரண்டு ஆண்டு தடை) 8 சீசன்களில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

8 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி, 3 முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி, ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது என்று சொன்னால், அதற்கு முக்கிய காரணம் கேப்டன் தோனி. கேப்டனாக மட்டுமல்லாமல் தேவைப்படும்போதெல்லாம் முக்கியமான இன்னிங்ஸை ஆடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுப்பவர் தோனி. 

நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸை இறுதி போட்டியில் எதிர்கொண்ட சிஎஸ்கே, மூன்றாவது முறையாக இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது. 

தோல்விக்கு பின் பேசிய தோனி, உலக கோப்பைக்கு பின்னர் தான் அடுத்த சீசன் குறித்த திட்டங்களை வகுக்க வேண்டும் என கூறினார். அடுத்த சீசனில் தான் ஆடுவேன் என்று நம்புவதாக தெரிவித்தார். உறுதியாக ஆடுவேன் என்று கூறவில்லை. தோனி உலக கோப்பைக்கு பின் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தோனி ஓய்வுபெறுவது உறுதியல்ல. எனினும் ஒருவேளை தோனி ஓய்வுபெற்றால் கூட ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தோனி அடுத்த சீசனில் ஆடுவது குறித்து உறுதியாக கூறாமல், ஆடுவேன் என்று நம்புவதாக தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு சிறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தோனி இல்லையென்றால் சிஎஸ்கேவின் கதி அதோகதிதான். அவரது இடத்தை நிரப்புவது சாதாரண விஷயமல்ல. தோனிக்கு பின் மீண்டும் சிஎஸ்கே அணியை வளர்த்தெடுப்பதற்கே சில சீசன்கள் ஆகிவிடும்.