ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியை 236 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. 237 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பிறகு தோனியும் கேதர் ஜாதவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி, கடைசிவரை ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தனர்.

இந்த போட்டியில் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவருமே சிறப்பாக ஆடினர். கேதர் ஜாதவ் 81 ரன்களையும் தோனி 59 ரன்களையும் குவித்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி அசத்தலாக ஆடிவருகிறார். 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த தோனி, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஃபார்முக்கு திரும்பினார். அந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய தொடரை ஹாட்ரிக் அரைசதத்துடன் முடித்த தோனி, நியூசிலாந்திலும் நன்றாக ஆடினார். 

நேற்றைய போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் அடித்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 அரைசதங்களை விளாசியுள்ளார் தோனி. 

2019ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி அடித்த ரன்கள்:

1. 51 ரன்கள் (96 பந்துகள்)

2. 55*ரன்கள் (54 பந்துகள்)

3. 87*ரன்கள் (114 பந்துகள்)

4. 59*ரன்கள் (72 பந்துகள்)

தோனியின் இந்த ஃபார்மும் பேட்டிங்கும் உலக கோப்பையில் இந்திய அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும்.