2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, 2007ம் ஆண்டே இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். தோனி இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 

ஒரு பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பராக மட்டுமல்லாது கேப்டனாகவும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்காற்றியவர் தோனி. இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2014ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, 2017ல் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவந்தார்.

தோனி, 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக கோப்பைக்கு பின்னர் ஓய்வு பற்றி வாய் திறக்காத தோனி, அதன்பின்னர் இந்திய அணியிலோ அல்லது எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. அதனால் இந்த ஆண்டுக்கான பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 

இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அடுத்த விக்கெட் கீப்பர் உருவாக்கப்பட்டுவருகிறார். தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் பேசிவந்த நிலையில், தோனி மட்டும் மௌனம் காத்துவந்தார். 

இந்நிலையில், ஐபிஎல் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், வரும் 20ம் தேதி அனைத்து அணிகளும் யுஏஇவிற்கு கிளம்புகின்றன. சிஎஸ்கே அணி மட்டும் ஒரு வாரம் வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடத்துகிறது. அந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ள தோனி சென்னை வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று யாருமே எதிர்பார்த்திராத நிலையில் திடீரென, தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடிவந்த தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தோனியின் அறிவிப்பையடுத்து, அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தோனி அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை வரை ஆடுவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்த நிலையில் தோனி திடீரென ஓய்வு அறிவித்துள்ளார்.