இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது. மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளன. 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் பேட்டிங்கில் திணறிவந்த தோனி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து ஃபார்முக்கு திரும்பினார். தான் இன்னும் சிறந்த ஃபினிஷர் தான் என்பதையும் நிரூபித்து காட்டினார். உலக கோப்பைக்கு முன் தோனி ஃபார்முக்கு திரும்பியது அணிக்கு பெரிய பலம். 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த அதே ஃபார்மை, ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியிலும் தொடர்ந்தார். பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து நான்கு அரைசதங்களை விளாசியுள்ள தோனி, நாக்பூரில் இன்று நடக்கும் போட்டியிலும் அசத்தப்போவது உறுதி. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் எப்படி தோனி வெளுத்து வாங்கி ரன்களை குவித்திருக்கிறாரோ, அதேபோல நாக்பூரும் தோனியின் கோட்டை. நாக்பூரில் 5 ஒருநாள் போட்டிகளில் ஆடி 268 ரன்களை குவித்துள்ளார் தோனி. இதுதான் நாக்பூரில் ஒரு வீரர் குவித்த அதிக ரன்கள். 

இதில் 2 சதங்களும் அடங்கும். 2009ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு சதமும், அதே ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக ஒரு சதமும் அடித்தார் தோனி. இன்னும் 2 போட்டிகளில் 25 மற்றும் 12 ரன்கள். இவை இரண்டுமே நாட் அவுட்டுகள். நாக்பூரில் ஒன்று நாட் அவுட், இல்லையென்றால் சதம் என்று அசத்தியிருக்கிறார் தோனி. 

நாக்பூரில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் தோனி அடுத்த இடங்களில் கோலியும் ரோஹித்தும் உள்ளனர். கோலி 4 போட்டிகளில் 209 ரன்களும் ரோஹித் 2 போட்டிகளில் 204 ரன்களும் குவித்துள்ளார். நாக்பூர் தோனியின் கோட்டை மட்டுமல்ல; ரோஹித்தின் கோட்டையும் கூட. எனவே இந்த போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு எளிதாக இருக்காது.