பஞ்சாப் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசன்களாக இருந்துவந்த அஷ்வினை கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே தூக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. டெல்லி அணி அஷ்வினை பெற பேச்சுவார்த்தையும் நடத்தியது. 

பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்த டீம் முடிவுக்கு வராமல் அப்படியே நின்றது. கும்ப்ளே பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ஆனதற்கு பிறகு, அஷ்வின் பஞ்சாப் அணியிலேயே தொடர்வார் என்பதை அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான  நெஸ் வாடியா உறுதிப்படுத்தியிருந்தார். 

ஆனால், தற்போது அஷ்வினை டெல்லி அணி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஐபிஎல் அணிகளுக்கு இடையேயான பரஸ்பர வீரர்கள் பரிமாற்ற அடிப்படையில், அஷ்வினை பெற்றுக்கொண்டு அவருக்கு பதிலாக இரண்டு இளம் வீரர்களை பஞ்சாப் அணிக்கு வழங்கவுள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி. அந்த இரண்டு இளம் வீரர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில், அந்த 2 வீரர்கள் நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் டிரெண்ட் போல்ட் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஜெகதீஷா சுஜித் ஆகிய இருவரும்தான் என தகவல் வெளியாகியுள்ளது. டிரெண்ட் போல்ட்டை 2018ம் ஆண்டு சீசனுக்கு டெல்லி அணி 2.2 கோடி ரூபாய்க்கு எடுத்தது. டெல்லி அணியில் அவருக்கு ஆடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அவர் நன்றாகவே ஆடியிருக்கிறார். பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் அபாரமான பங்களிப்பை செய்திருக்கிறார். அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் தான் ஆடலாம் என்பதால் அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அவரை டெல்லி அணி பஞ்சாப்புக்கு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டெல்லி அணி பஞ்சாப்பிற்கு வழங்கவுள்ள மற்றொரு வீரராக சொல்லப்படும் ஜெகதீஷா சுஜித், கடந்த சீசனின் பாதியில் ஹர்ஷல் படேலுக்கு பதிலாக எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வரவில்லை. ஆனால் இவர்கள் இருவரையும் பஞ்சாப் அணிக்கு வழங்க டெல்லி அணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.