இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசன் எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்துவந்த நிலையில், பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கே கொரோனா உறுதியானதையடுத்து, கிரிக்கெட் வீரர்களும் கலக்கமடைந்துள்ளனர்.

கேகேஆர் அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியானதையடுத்து, இன்று நடக்கவிருந்த ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது. கேகேஆர் அணி அடுத்ததாக வரும் 8ம் தேதி டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த போட்டியும் ஒத்திவைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சிஎஸ்கே அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி மற்றும் பஸ் க்ளீனர் ஆகிய மூவருக்கும் கொரோனா உறுதியானது.

கேகேஆர் வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, அந்த அணியுடன் கடைசியாக ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி குவாரண்டினில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டதையடுத்து அந்த அணி முழுவதும் குவாரண்டினில் உள்ளது. கடைசியாக கடந்த ஏப்ரல் 29ம் தேதி கேகேஆர் அணி ஆடிய போட்டியில், அதை எதிர்த்து ஆடிய அணி டெல்லி கேபிடள்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.