லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ள கேகேஆர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன. இந்த சீசனில் புதிதாக இறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளும் அருமையாக விளையாடிவருகின்றன.

ஆனால் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளன.

டெல்லி கேபிடள்ஸ் அணி மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று, வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கிய நிலையில், அடுத்த 2போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிராக நேற்று ஆடிய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியில் பிரித்வி ஷா மட்டுமே அதிரடியாக பேட்டிங் ஆடி 34 பந்தில் 61 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே திணறியதால் 20 ஓவரில் 149 ரன்கள் மட்டுமே அடித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. 150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணி இன்னொரு முறை பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு ரூ.24 லட்சமும், மற்ற 10 வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சமும் அபராதமாக விதிக்கப்படும்.