டெல்லி கேபிடள்ஸ் அணியில் மிட்செல் மார்ஷை தொடர்ந்து மற்றுமொரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஃபிசியோ பாட்ரிக், ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் மற்றும் ஒரு சப்போர்ட் ஸ்டாஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து கடந்த 16ம் தேதி முதல் அந்த அணி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது. இன்று டெல்லி கேபிடள்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி புனேவில் நடக்கவேண்டியது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையிலிருந்து புனேவிற்கு டெல்லி அணி பயணிப்பது ரிஸ்க் என்பதால் இன்றைய போட்டி மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், டெல்லி அணியில் மற்றுமொரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் டிம் சேஃபெர்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. டெல்லி அணியில் அதிகரிக்கும் கொரோனா அந்த அணிக்கு பெரும் அச்சுறுத்தலையும், வீரர்கள் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியுள்ளது.
