டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஃபிசியோ பாட்ரிக்கிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், கொரோனா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டு ஐபிஎல் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் பாதி சீசன் இந்தியாவில் நடத்தப்பட்ட நிலையில், பாதியில் கொரோனா பாதிப்பு அதிகமானதையடுத்து, 6 மாதங்களுக்கு பிறகு அமீரகத்தில் பிற்பாதி நடத்தப்பட்டது.
கொரோனா பாதிப்புகள் வெகுவாக மட்டுப்பட்டதையடுத்து, இந்த சீசன் இந்தியாவில் நடத்தப்படுகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக மும்பை மற்றும் புனே ஆகிய 2 நகரங்களில் மட்டுமே லீக் போட்டிகள் முழுவதுமாக நடத்தப்படுகின்றன.
ஐபிஎல் 15வது சீசன் எந்த பிரச்னையுமின்றி விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இப்போது பிரச்னை ஆரம்பமாகியுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஃபிசியோ பாட்ரிக் ஃபர்ஹார்ட்-டிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறார்.
டெல்லி அணியில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவியிருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் பாட்ரிக் ஃபிசியோ என்பதால், வீரர்களின் ஃபிட்னெஸை கண்காணிக்கும் விதமாக அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருப்பார்.
