Asianet News TamilAsianet News Tamil

அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான்யா இருக்கு..! இந்திய அணி தவறவிட்ட தருணம் அதுதான் - டீன் எல்கர்

டி.ஆர்.எஸ் விஷயத்தில் இந்திய அணி உணர்ச்சிப்பூர்வமாக அணுகியதுதான் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது; அதுதான் தங்கள் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
 

dean elgar feels indias reaction on drs incident benefited south africa
Author
Cape Town, First Published Jan 16, 2022, 9:21 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என தென்னாப்பிரிக்கா வென்றது. தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி.

கேப்டவுனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி தொடரை வென்றது.

இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடிய நிலையில், இந்திய அணி தவறவிட்ட தருணம் எதுவென்று தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

கடைசி டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கர் 22 ரன்களுடன் களத்தில் இருந்தபோது அஷ்வின் வீசிய பந்தை கால்காப்பில் வாங்கினார் எல்கர். கள நடுவர் எராஸ்மஸ் அதற்கு அவுட் கொடுத்தார். எல்கர் அதை ரிவியூ செய்தார். கிட்டத்தட்ட ஃபுல் லெந்த்தில் விழுந்த அந்த பந்து, பால் டிராக்கிங்கில் அதிக பவுன்ஸ் ஆகி ஸ்டம்ப்புக்கு மேல் செல்வதாக காட்டியது. அதனால் டீன் எல்கர் தப்பினார்.

அந்த பந்து அதிக பவுன்ஸ் ஆனதை இந்திய வீரர்களால் நம்ப முடியவில்லை. கள நடுவரே அதிர்ச்சிதான் அடைந்தார். அதனால் கடும் அதிருப்தியடைந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஸ்டம்ப் மைக்கிடம் சென்று, உங்கள் அணி(தென்னாப்பிரிக்கா) வீரர்களும் பந்தை சேதப்படுத்துகின்றனர். அதையும் கொஞ்சம் பாருங்கள். எதிரணி மீதே கவனம் செலுத்தாமல் இருபக்கமும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள் என்றார் கோலி.

இதையடுத்து, இந்திய அணியின் 11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே செயல்படுவதாக கேஎல் ராகுல் கூறினார். அதற்கு, “கேமராமேன்களும் தான்” என கோலி கூறினார்.

கோலியின் செயல்பாட்டை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், அந்த சம்பவம் தான் இந்திய அணியை போட்டியில் கவனம் செலுத்துவதிலிருந்து திசைமாற்றி தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டதாக தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள டீன் எல்கர், அந்த டி.ஆர்.எஸ் சம்பவத்திற்கு பிறகு இந்திய அணி உணர்ச்சிப்பூர்வமாக அணுக ஆரம்பித்தது. டெஸ்ட் போட்டி என்றாலே அழுத்தத்தை கையாள்வதுதான். ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு இந்திய அணி மீதான அழுத்தம் அதிகரித்தது. அது எங்களுக்கு வசதியாக போயிற்று என்று டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios