புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தின் கடைசி செசனில், 601 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் புனே ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்காவின் தரமான ஃபாஸ்ட் பவுலர்களின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிய இந்திய வீரர்கள் ரன்களை குவித்தனர்.

விராட் கோலி இரட்டை சதமடித்து 254 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. மயன்க் அகர்வால் சதமடித்தார். ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். சதத்தை நெருங்கிய ஜடேஜா 91 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தான் இந்திய அணி 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க வீரர்களால் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்ள முடியவில்லை. மார்க்ரம் மற்றும் டீன் எல்கர் ஆகிய இருவரும் உமேஷ் யாதவின் வேகத்தில் வீழ்ந்தனர். பவுமாவை ஷமி வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் அடித்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. 

இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்ட நோர்ட்ஜேவை ஷமி வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து டி ப்ருய்னை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். 55 ரன்களுக்கே தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் கேப்டன் டுப்ளெசிஸும் டி காக்கும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இந்த ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்தது மட்டுமல்லாமல் அடித்து ஆடி ஸ்கோரையும் மளமளவென உயர்த்தியது. இந்த ஜோடியை ஃபாஸ்ட் பவுலர்களால் வீழ்த்த முடியாத நிலையில், அஷ்வின் தனது அபாரமான சுழலால், அந்த ஜோடியை பிரித்தார். 

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி காக்கை அஷ்வின் தனது சுழலில் வீழ்த்தினார். அஷ்வின் வீசிய பந்தை தடுத்தாட முயன்றார் டி காக். ஆனால் அந்த பந்து டி காக் எதிர்பார்த்த லைனில் வராமல், லேசாக டர்ன் ஆகி, டி காக்கிற்கு ஏப்பு காட்டி, மிகத்துல்லியமாக ஸ்டம்புக்கு மேலிருக்கும் ஸ்டிக்கை தட்டியது. அஷ்வினின் துல்லியமான பந்தை கண்டு அதிர்ந்தே போனார் டி காக். ஆனால் அவருக்கு அது போல்டா அல்லது கீப்பர் பிடித்து அடித்தாரா என்பது தெரியாமல் நின்றார். அது போல்டுதான் என உறுதிப்படுத்தியதும் நடையை கட்டினார். 

டி காக் 31 ரன்களில் அவுட்டாக, அதன்பின்னர் டுப்ளெசிஸுடன் முத்துசாமி ஜோடி சேர்ந்துள்ளார். டுப்ளெசிஸ் அரைசதம் அடித்து ஆடிவருகிறார். மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்துள்ளது.