ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டன.

இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த டெல்லி கேபிள்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஜோடி அதிரடியாக தொடங்கியது. ஆனால் பிரித்வி ஷா பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 18 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அதன்பின்னர் தவானும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய தவான், அரைசதம் அடித்து சரியாக 50 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் அரைசதம் கடந்தார். ஆனால் அவரும் நிலைக்கவில்லை. 52 ரன்களில் ஐயரும் அவுட்டாக, இதற்கிடையே ரிஷப் பண்ட்டும் 7 ரன்களில் அவுட்டாக, 16,17,18 ஆகிய ஓவர்களில் டெல்லி அணியின் ரன்ரேட் குறைந்தது.

ஆனால் கடைசி 2 ஓவர்களில் ரூதர்ஃபோர்டும் அக்ஸர் படேலும் இணைந்து ரன்னை உயர்த்தினர். உமேஷ் வீசிய 19வது ஓவரில் அக்ஸர் படேல் 2 பவுண்டரியும் ரூதர்ஃபோர்டு ஒரு சிக்ஸரும் அடித்தனர். சைனி வீசிய கடைசி ஓவரில்  ரூதர் ஃபோர்டு 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். அக்ஸர் படேலும் ஒரு பவுண்டரி அடித்தார். ரூதர்ஃபோர்டு 13 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். அக்ஸர் படேல் 9 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார். கடைசி நேர ரூதர்ஃபோர்டு - படேல் ஜோடியின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 187 ரன்களை குவித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.