Asianet News TamilAsianet News Tamil

David Warner: அந்த ஒரு விஷயம் தான் என்னை காயப்படுத்தியது! SRH அணி தூக்கி எறிந்தது குறித்து மனம் திறந்த வார்னர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்னை ஓவர்நைட்டில் தூக்கி எறிந்தது குறித்து மனம் திறந்துள்ளார் டேவிட் வார்னர்.
 

david warner reveals what hurts him a lot in srh exit issue
Author
Chennai, First Published Jan 7, 2022, 6:07 PM IST

ஐபிஎல்லில் 2014ம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர், 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு தனது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சியின் மூலம் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் வார்னர்.

ஆனால் வார்னர் அணிக்கு அளித்த பங்களிப்பை எல்லாம் மறந்து, அவர் ஃபார்மில் இல்லாத காரணத்தால் ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாதியில் ஒன்றிரண்டு போட்டிகளுக்கு பின்னர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் வார்னர். கேப்டன்சி கேன் வில்லியம்சனிடம் ஒப்படைக்கப்பட்டு, வார்னருக்கு ஆடும் லெவனில் கூட இடம் வழங்கப்படவில்லை. வார்னர் மாதிரியான ஒரு கிரேட் பிளேயரை ஃபார்மை காரணம் காட்டி ஓரங்கட்டியது ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

வார்னரின் மோசமான ஃபார்ம் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ என அந்த அணி கவலைப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பையில் 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் மற்றும் 48.16 என்ற சராசரியுடன் 289 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார் வார்னர். 

ஃபார்முக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு சிறந்த வீரர் என்றைக்குமே சிறந்த வீரர் தான். வார்னர் ஒரு கிரேட் பிளேயர். அவரை சன்ரைசர்ஸ் அணி நடத்திய விதம் அவருக்கு மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்களுக்குமே வருத்தமளித்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியிலிருந்து விலகிய வார்னர், 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் கலந்துகொள்கிறார். வார்னர் கண்டிப்பாக மிகப்பெரிய தொகைக்கு விலைபோவார் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணி தன்னை தூக்கி எறிந்தது எந்தளவிற்கு தன்னை காயப்படுத்தியது என்பது குறித்து டேவிட் வார்னர் பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய டேவிட் வார்னர், கேப்டனை திடீரென அணியிலிருந்து நீக்குகிறீர்கள்; இனிமேல் அவருக்கு ஆடும் லெவனிலேயே இடம் இல்லை என்றால், அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு நீங்கள் (சன்ரைசர்ஸ் அணி) சொல்லும் மெசேஜ் என்ன? நாளை நமக்கும் இதே நிலைமை தானோ..? என இளம் வீரர்கள் பயப்படுவார்கள். என்னை நீக்கிய விஷயத்தில், இளம் வீரர்களுக்கு இப்படியான பயம் வந்திருக்குமே என்பது மட்டுமே என்னை மிகவும் காயப்படுத்தியது என்றார் வார்னர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios