ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் சரியாக ஆடமுடியாமல் திணறிவருகிறார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்த வார்னரும் ஸ்மித்தும் தடை முடிந்து உலக கோப்பையில் ஆடினர். உலக கோப்பையில் ஸ்மித் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் வார்னர் அபாரமாக ஆடி அசத்தினார். 

உலக கோப்பையில் செம ஃபார்மில் இருந்த வார்னர், ஆஷஸ் தொடரில் படுமோசமாக சொதப்பிவருகிறார். ஆஷஸ் தொடரில் ஸ்மித் அபாரமாக ஆடிவரும் நிலையில், வார்னரோ இரட்டை இலக்கத்தையே தொடமுடியாமல் திணறுகிறார். 

ஆஷஸ் தொடரின் மூன்று போட்டிகள் முடிந்து நான்காவது போட்டி நடந்துவருகிறது. நான்காவது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் அடித்துள்ளது. முதல் 3 போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களிலுமே பேட்டிங் ஆடி, ஒரேயொரு இன்னிங்ஸில் மட்டுமே அரைசதம் அடித்த வார்னர், மற்ற ஐந்து இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்கத்திலும் ரன்னே எடுக்காமலும் ஆட்டமிழந்தார். 

இந்நிலையில், நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் முதல் ஓவரிலேயே ஸ்டூவர்ட் பிராடின் பந்தில் டக் அவுட்டானார். ஆஷஸ் தொடரில் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடி, அதில் 5 முறை ப்ராடின் பந்தில ஆட்டமிழந்துள்ளார். 2, 8, 2, 5, 61, 0 மற்றும் 0 இதுதான் ஆஷஸ் தொடரில் இதுவரை வார்னர் ஆடிய 7 இன்னிங்ஸ்களில் அடித்த ரன்கள். 

அதிரடியான தொடக்க வீரர் வார்னர், முமெண்டம் கிடைக்காமல் தவித்துவருகிறார். அவருக்கு தொடர்ச்சியாக 2 சிறப்பான இன்னிங்ஸ்கள் அமைய வேண்டியது அவசியம். அவர் சுதாரிப்பதற்கு முன்பாகவே முதல் சில ஓவர்களில் ப்ராட் அவரது விக்கெட்டை வீழ்த்திவிடுகிறார். ஆஷஸ் தொடரில் இன்னும் அதிகபட்சம் 3 இன்னிங்ஸ்கள் வார்னருக்கு எஞ்சியுள்ள நிலையில் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஸ்மித் - லபுஷேன் ஆகிய இருவரும் அபாரமாக ஆடிவருவதால் வார்னரின் மோசமான ஃபார்ம் ஆஸ்திரேலிய அணியை பெரிதாக பாதிக்கவில்லை.