இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ஷிகர் தவான், மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஜஸ்ப்ரித் பும்ரா.
 
ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், பாட் கம்மின்ஸ்,  மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகிய இருவரும் இணைந்து நிதானமாக நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் பும்ரா மற்றும் ஷமியிடம் புதிய பந்தில் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த வார்னரும் ஃபின்ச்சும் அவசரப்படாமல் நிதானமாக ஆடி ஸ்கோர் செய்தனர்.

சிறப்பாக ஆடிய ஃபின்ச் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து வார்னரும் அரைசதம் அடித்தார். பாதி இன்னிங்ஸ்(25) முடிந்துவிட்ட நிலையில், இதுவரையிலும் முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் திணறிவருகின்றனர் இந்திய பவுலர்கள்.

பும்ரா, ஷமி, சைனி, ஜடேஜா, சாஹல் ஆகிய ஐவரும் மாறி மாறி வீசியும் வார்னர் மற்றும் ஃபின்ச் ஜோடியை பிரிக்க முடியவில்லை. 25 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் அடித்துள்ளது. டெத் ஓவர்களில் அடித்து ஆட மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் ஆகியோர் இருப்பதால், ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை அடிப்பதற்கான அடித்தளத்தை வார்னரும் ஃபின்ச்சும் அமைத்து கொடுத்துவிட்டனர்.