Asianet News TamilAsianet News Tamil

SL vs AUS 3வது டி20:கடைசி 3ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய கேப்டன் தசுன் ஷனாகா!ஆஸி.,யை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 
 

dasun shanaka 25 balls fifty helps sri lanka to beat australia in last t20
Author
Pallekele, First Published Jun 11, 2022, 10:39 PM IST

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்தது. முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி ஜூன் 11 அன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஜோஷ் இங்லிஸ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, பிரவீன் ஜெயவிக்ரமா.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் சேர்ந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஃபின்ச்20 பந்தில் 29 ரன்களும், வார்னர் 33 பந்தில் 39 ரன்களும் அடித்தனர். மேக்ஸ்வெல் 16 ரன்னிலும் ஜோஷ் இங்லிஸ் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். 

ஸ்மித்தும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ஸ்மித் 27 பந்தில் 37 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 23 பந்தில் 38 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 175 ரன்களை குவித்தது.

176 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணியில் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 14 ஓவரில் 98 ரன்களுக்கே இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

கடைசி 3 ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்டது. மிகக்கடினமான இந்த இலக்கை அடிப்பது மிகவும் கடினம் என்பதால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது. ஆனால் இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா இப்படியொரு இன்னிங்ஸை ஆடுவார் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையில், கடைசி 3 ஓவரில் காட்டடி அடித்தார் ஷனாகா.

ஹேசில்வுட் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்தார் ஷனாகா. 19வது ஓவரில் ஷனாகா ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடிக்க, சாமிகா கருணரத்னே ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட, முதல் பந்தை 2 வைடாக வீசினார். பின்னர் 3வதாக வீசிய முதல்  பந்தில் ரீபாலில் ஒரு ரன் அடித்தார் ஷனாகா. 2வது பந்திலும் ஒரு ரன் தான் கிடைத்தது. கடைசி 4 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட, 3 மற்றும் 4வது பந்துகளில் 2 பவுண்டரி அடித்த ஷனாகா, 5வது பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன் ஆட்டமும் டை ஆனதால், கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய கேன் ரிச்சர்ட்ஸன் அந்த பந்தை வைடாக வீச, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த டி20 தொடரை ஏற்கனவே இலங்கை அணி இழந்துவிட்டாலும், இந்த வெற்றி அந்த அணிக்கு ஊக்கத்தை அளிக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios