இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர் அஷ்வின் தான். ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டாலும் டெஸ்ட் அணியில் அவர் தான் முதன்மையான ஸ்பின்னர். 

ஆனால் அஷ்வின் இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர் இல்லை என்பதை பறைசாற்றும் விதமாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும் அஷ்வினை, அந்த அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே சேர்க்கவில்லை. ஜடேஜா ஆடவைக்கப்பட்டதுடன், ஜடேஜா தான் வெளிநாடுகளில் இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர் என கேப்டன் கோலி ஓபன் ஸ்டேட்மெண்ட்டே விட்டார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் அக்டோபர் 2ம் தேதிதான் தொடங்குகிறது. எனவே இதற்கிடையே இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவருகிறார் அஷ்வின். 

நாட்டிங்காம்ஷைர் அணிக்காக ஆடிவரும் அஷ்வின், கெண்ட் அணிக்கு எதிரான போட்டியில், முதல் இரண்டு ஸ்பெல்களை நன்றாக வீசினார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் கெண்ட் அணி 304 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நாட்டிங்காம்ஷைர் அணி வெறும் 124 ரன்கள் மட்டுமே அடித்தது. 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய கெண்ட் அணி, ஆட்டத்தின் இரண்டாவது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்துள்ளது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே இந்திய அணியால் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டுவரும் அஷ்வினுக்கு, கவுண்டியில் முரட்டு அடி விழுந்துள்ளது. 

முதல் இன்னிங்ஸில், கெண்ட் அணிக்கு அஷ்வின் வீசிய முதல் 17 ஓவர்களில் வெறும் 35 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். ஆனால் அதன்பின்னர் அவர் வீசிய ஓவர்களை கெண்ட் அணியின் 43 வயதானது டேரன் ஸ்டீவன்ஸ் அடித்து நொறுக்கினார். 90 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 88 ரன்கள் அடித்த ஸ்டீவன்ஸ், அஷ்வின் வீசிய 40 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்களுடன் 54 ரன்களை குவித்தார். முதல் 4 விக்கெட்டுகளுக்கு பின் விக்கெட்டும் வீழ்த்தாத அஷ்வின், ரன்னையும் வாரி வழங்கினார். முதல் 17 ஓவர்களில் வெறும் 35 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த அஷ்வின், இன்னிங்ஸ் முடிவில்,  32 ஓவர்களில் 121 ரன்களை வாரிவழங்கியிருந்தார். அதற்கு முக்கிய காரணம், அஷ்வினின் பவுலிங்கை ஸ்டீவன்ஸ் வெளுத்து வாங்கியதுதான்.