பவுன்ஸர் விதிகளை மாற்றியதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணி நலிவடைந்ததற்கு காரணம் என வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் தலைசிறந்த கிரிக்கெட் அணியாக திகழ்ந்து, சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது. கிரிக்கெட் வரலாற்றில் முதல் 2 உலக கோப்பைகளை வென்றது கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி. 

1970-80களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தலைசிறந்து விளங்கியது. கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ் காலத்திற்கு பிந்தைய பிரயன் லாரா ஆடிய காலக்கட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறந்தே விளங்கியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காமெடி பீஸ் அணியாக மாறிவிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.  

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணி, படுமோசமாக தோற்றுவருகிறது. டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி 2016ல் உலக கோப்பையை வென்றாலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டுவிதமான போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி சோபிக்கவில்லை.

இந்நிலையில், பவுன்ஸர் விதிமுறைகளை மாற்றியதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணி நலிவடைய காரணம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள டேரன் சமி, பாபிலோன், ஜெஃப் தாம்சன், டென்னிஸ் லில்லி ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் எல்லாம் மிரட்டலாக வீசி பேட்ஸ்மேன்களை பதம் பார்த்திருக்கிறார்கள். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் உருவானார்கள். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது. பவுன்ஸர் வீசுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம் குறைய தொடங்கிவிட்டது என்று கருதுகிறேன். இந்த பார்வை தவறாக இருக்கலாம். ஆனால் அதுதான் எனது கருத்து என டேரன் சமி தெரிவித்துள்ளார்.

1991ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்ஸர் மட்டுமே வீச வேண்டும் என்று விதிமுறை கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் ஓவருக்கு 2 பவுன்ஸர்கள் வீசலாம் என்று 1994ம் ஆண்டு விதி மாற்றியமைக்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளிலும் ஒரு ஓவரில் ஒரு பவுன்ஸர் மட்டுமே வீசலாம் என்றிருந்த விதி, இரண்டு பவுன்ஸர்கள் என்று 2012ம் ஆண்டு மாற்றப்பட்டது. அனைத்து அணிகளுக்கும் ஒரே விதிதான். எனவே சமி சொன்னது நொண்டிச்சாக்கு.