டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு அவசியம் என்று டேல் ஸ்டெய்ன் கருத்து கூறியுள்ளார். 

டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

37 வயதான தினேஷ் கார்த்திக், இந்த வயதிலும் ஐபிஎல்லில் அபாரமாக பேட்டிங் ஆடி ஆர்சிபி அணிக்காக பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்து கொடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து, இந்த தொடரிலும் அசத்திவருகிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 15 ஓவரில் வெறும் 96 ரன்கள் மட்டுமே அடித்திருந்த இந்திய அணி 20 ஓவரில் 169 ரன்களை அடிக்க உதவினார் தினேஷ் கார்த்திக். காட்டடி அடித்த தினேஷ் கார்த்திக் 26 பந்தில் அரைசதம் அடித்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக்கின் முதல் அரைசதம் இதுதான்.

நல்ல ஸ்டிரைக் ரேட்டில் அடித்து ஆடி, டெத் ஓவர்களில் காட்டடி அடித்து ஃபினிஷிங் செய்து கொடுத்து, தன்னை சிறந்த ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார் தினேஷ் கார்த்திக். டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், ரிஷப் பண்ட் சொதப்பிவரும் அதேவேளையில், சீனியர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் செம ஃபார்மில் ஆடிவருவது, அணியில் அவரது இடத்தை கிட்டத்தட்ட உறுதியாக்கிவிட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தன்னை புறக்கணிக்கமுடியாத சூழலை உருவாக்கியுள்ளார் தினேஷ் கார்த்திக். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

அந்தவகையில், தினேஷ் கார்த்திக் குறித்து பேசியுள்ள டேல் ஸ்டெய்ன், ரிஷப் பண்ட் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்துவருகிறார். சிறந்த வீரர்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்று, அதை திருத்திக்கொள்வார்கள். ரிஷப் அப்படி செய்யவில்லை. தினேஷ் கார்த்திக் அவருக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சிறப்பாக பயன்படுத்தி, அவர் எப்பேர்ப்பட்ட கிளாஸ் பிளேயர் என்பதை நிரூபித்துவருகிறார். உலக கோப்பைகளை வெல்ல வேண்டுமென்றால், இதுமாதிரி ஃபார்மில் இருக்கும் வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் என்று டேல் ஸ்டெய்ன் கருத்து கூறியுள்ளார்.