லைன் & லென்த்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிவேகமாக வீசுவதில் மட்டுமே கவனம் செலுத்து என்று ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக்கிற்கு சன்ரைசர்ஸ் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளர் டேல் ஸ்டெய்ன் அறிவுறுத்தியிருக்கிறார்.
ஐபிஎல் 15வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கானதாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ஆயுஷ் பதோனி, திலக் வர்மா உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கிலும், உம்ரான் மாலிக், யஷ் தயால் உள்ளிட்ட இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் பவுலிங்கிலும் அசத்துகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக் வேகத்தில் மிரட்டுகிறார். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசுகிறார். இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் 150 கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசுவது என்பது அரிதினும் அரிதான விஷயம். அதை செய்கிறார் உம்ரான் மாலிக்.
இந்த சீசனில் இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள உம்ரான் மாலிக், இந்த சீசனில் டாப் 5 அதிவேக பந்துகளில் 3 பந்துகளை வீசி மிரட்டியிருக்கிறார். இந்த சீசனின் அதிவேக பந்து(153.9) ஃபெர்குசன் வீசியது. அதன்பின்னர் 2 (153.3) மற்றும் 3 (153.1) இடங்களில் உம்ரான் மாலிக் இருக்கிறார். 5ம் இடத்திலும் 152.6 வேகத்தில் வீசி உம்ரான் மாலிக்கே இருக்கிறார்.
இந்த சீசனில் அனைவரையும் கவர்ந்த ஃபாஸ்ட் பவுலராக உம்ரான் மாலிக் திகழ்கிறார். அதற்கு முக்கிய காரணம், அவர் ஆடும் சன்ரைசர்ஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளர் டேல் ஸ்டெய்னும் கூட. லைன் & லெந்த்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிவேகமாக வீசு என்று உம்ரான் மாலிக்கை அவர் கொம்பு சீவி விட்டிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் சுழல் ஜாம்பவான் க்ரேம் ஸ்வான், ஐபிஎல்லில் கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்க்காத விஷயத்தை செய்து மிரட்டுகிறார் உம்ரான் மாலிக். ஃப்ரெஷ் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக், மிரட்டலான வேகத்தில் பந்துவீசுகிறார். ஸ்டெய்ன் அவரிடம், லைன் & லெந்த்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் உன்னால் எவ்வளவு வேகமாக வீசமுடியுமோ அவ்வளவு வேகமாக வீசு என்று ஸ்டெய்ன் கூறிவிட்டார். அதுதான் சரியும் கூட. நல்ல கண்ட்ரோலை வைத்துள்ள உம்ரான் மாலிக், நல்ல ஏரியாக்களில் அருமையாக வீசுகிறார் என்று ஸ்வான் புகழாரம் சூட்டியுள்ளார்.
