தலா 3 முறை கோப்பையை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளாகவும் கடும் போட்டியாளர்களாகவும் திகழும் அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே. 

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே ஆதிக்கம் செலுத்திவருகிறது. 2010, 2011, 2018 ஆகிய மூன்று சீசன்களிலும் சிஎஸ்கே கோப்பையை வென்றுள்ளது. 2013, 2015, 2017 ஆகிய மூன்று சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது. 

ஐபிஎல்லில் அனைத்து அணிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்தி ஆடும் சிஎஸ்கேவால் மும்பை இந்தியன்ஸின் மீது மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி அனுமதித்ததும் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற 3 ஐபிஎல் கோப்பைகளில் 2 சிஎஸ்கேவை இறுதி போட்டியில் வீழ்த்தி வெல்லப்பட்டதாகும். 

இந்த சீசனில் லீக் சுற்றில் இரண்டு போட்டிகள் மற்றும் நேற்று நடந்த பிளே ஆஃப் போட்டி ஆகிய மூன்றிலுமே சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வென்றது. கடந்த சீசனில் இரு அணிகளும் 2 முறை மோதியதில் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸும் வெற்றி பெற்றன. 

கடந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி மற்றும் இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 போட்டிகள் ஆகியவற்றில் வென்றதன் மூலம் சிஎஸ்கே அணியை தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வீழ்த்திய அணி என்ற சாதனையையும் பெருமையும் மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது. இதுவரை வேறு எந்த அணியுமே சிஎஸ்கேவை தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வீழ்த்தியதில்லை. 

அதுமட்டுமல்லாமல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக சிஎஸ்கே ஆடியுள்ள 21 போட்டிகளில் மூன்றில் மட்டுமே தோற்றுள்ளது. அந்த 3 தோல்விகளுமே மும்பை இந்தியன்ஸிடம் தான். 

மும்பை இந்தியன்ஸிடம் வாங்கிய அடி போதாதென்று, ரோஹித் சர்மாவுக்கு எதிராக மோசமான சாதனை ஒன்றை கைவசம் வைத்துள்ளது சிஎஸ்கே. அதாவது ரோஹித் சர்மா ஆடும் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியதே இல்லை என்பதுதான் அந்த சம்பவம். 

ரோஹித் சர்மா 2008 முதல் 2010ம் ஆண்டுவரை 3 சீசன்கள் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடினார். இதில் 2009ம் ஆண்டு ஐபிஎல் இந்தியாவில் நடக்கவில்லை. 2008ம் ஆண்டு சிஎஸ்கேவை டெக்கான் சார்ஜர்ஸ் சென்னையில் வீழ்த்தியது. 2010ம் ஆண்டும் வீழ்த்தியது. 2011 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவருகிறார் ரோஹித். 2011ல் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்த போட்டியில் ரோஹித் ஆடவில்லை. எனினும் அந்த போட்டியிலும் மும்பை தான் வென்றது. அதன்பின்னர் சிஎஸ்கேவிற்கு எதிராக சென்னையில் நடந்த போட்டிகள் ஒன்றில் கூட, ரோஹித் சர்மா தலைமை வகிக்கும் மும்பை இந்தியன்ஸை சிஎஸ்கே அணி வீழ்த்தியதில்லை.