Asianet News TamilAsianet News Tamil

MI vs CSK: பரபரப்பான போட்டி.. கடைசி ஓவரில் காட்டடி அடித்து ஃபினிஷிங் செய்த தோனி..! சிஎஸ்கே த்ரில் வெற்றி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
 

csk thrill win in last ball against mumbai indians in ipl 2022
Author
Mumbai, First Published Apr 22, 2022, 4:39 AM IST

ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதிய போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்தது. இதற்கு முன் இரு அணிகளும் ஆடிய 6 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அனைத்திலும் தோல்வி மற்றும் சிஎஸ்கே ஒரெயொரு வெற்றி என்ற மோசமான நிலையில், இந்த போட்டியில் மோதின.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்(அதுமட்டும்தான் செய்தார்). சிஎஸ்கே அணி 2 மாற்றங்களுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியது.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, தோனி, ரவீந்திர ஜடேஜா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி.

மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், ரித்திக் ஷோகீன், ரிலே மெரிடித், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ப்ரித் பும்ரா.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையுமே முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகேஷ் சௌத்ரி. பேபி ஏபி என்றழைக்கப்படும் இளம் அதிரடி வீரர் டிவால்ட் ப்ரெவிஸை தனது அடுத்த ஓவரான இன்னிங்ஸின் 3வது ஓவரில் வீழ்த்தினார் முகேஷ் சௌத்ரி.

முகேஷ் சௌத்ரி அருமையாக பந்துவீசி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக பெயரளவில் ஜடேஜா இருந்தாலும், களத்தில் பவுலிங் மாற்றம், ஃபீல்டிங் செட்டப் ஆகிய அனைத்துமே தோனி தான் செய்கிறார் என்பது விமர்சனமாகவே எழுந்திருந்தது. அதுதொடர்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் மீட்டிங்கை போட்டு, இனிமேல் ஜடேஜாவே கேப்டன்சியை பார்த்துக்கொள்ளட்டும்; நீங்கள் விலகிக்கொள்ளுங்க என தோனிக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனாலும் தோனியின் ஆதிக்கம் தொடர்ந்துவருகிறது. இன்றைய போட்டியில் பவுலிங் சுழற்சி, ஃபீல்டிங் செட்டப் ஆகிய அனைத்தையுமே தோனி தான் செய்தார்.

அதனால் சுயமாக ஜடேஜா சற்று கீழாக உணர்வது, அவரது ஃபீல்டிங்கிலேயே வெளிப்பட்டது. சமகாலத்தின் தலைசிறந்த ஃபீல்டரான ஜடேஜா, 2 எளிய கேட்ச்களை தவறவிட்டார். 23 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட மும்பை அணி, அதன்பின்னரும் சூர்யகுமார் யாதவ்(32), ரித்திக் ஷோகீன்(25) மற்றும் பொல்லார்டு(14) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. சிஎஸ்கே அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தாலும், ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. பிராவோ ஒரு கேட்ச், ஜடேஜா 2 கேட்ச், ஷிவம் துபே ஒரு கேட்ச் என கைக்கு வந்த நிறைய கேட்ச்களை தவறவிட்டனர் சிஎஸ்கே வீரர்கள். ஆனால் அதையும் மீறி மும்பை வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த திலக் வர்மா கடைசி வரை களத்தில் நின்று 43 பந்தில் 51 ரன்கள் அடித்தார். ஜெய்தேவ் உனாத்கத் கடைசியில் 9 பந்தில் 19 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 155 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 156 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது.

156 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். அதன்பின்னர் மிட்செல் சாண்ட்னெர் 11 ரன்னிலும், ராபின் உத்தப்பா 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவ்வளவு எளிதாக சிஎஸ்கேவை மும்பை அணி ஸ்கோர் செய்ய அனுமதிக்கவில்லை. அபாரமாக பந்துவீசி ருதுராஜ் மற்றும் சாண்ட்னெரை வீழ்த்திய டேனியல் சாம்ஸ், அதன்பின்னர் அம்பாதி ராயுடு(40) மற்றும் ஷிவம் துபே(13) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். ஜடேஜாவும் 3 ரன்னில் ஆட்டமிழக்க, ஆட்டம் கிட்டத்தட்ட மும்பை பக்கம் திரும்பியது.

ஆனால் தோனி அதை அனுமதிக்கவில்லை. கடைசி 4 ஓவரில் சிஎஸ்கே அணிக்கு 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 17வது ஓவரை வீசிய பும்ரா, அருமையாக வீசி வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் 18வது ஓவரை வீசிய உனாத்கத் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் 14 ரன்களை வழங்கினார். பும்ரா வீசிய 19வது ஓவரில் 11 ரன்களை அடித்தனர். ப்ரிட்டோரியஸும் தோனியும் களத்தில் நிற்க, கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. உனாத்கத் கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ப்ரிட்டோரியஸை வீழ்த்தி நம்பிக்கையளித்த உனாத்கத், 2வது பந்தில் பிராவோவிற்கு சிங்கிள் வழங்கினார். அதனால் 3வது பந்தில் க்ரீஸுக்கு வந்த தோனி, 3வது பந்தில் சிக்ஸரும், 4வது  பந்தில் பவுண்டரியும், 5வது பந்தில் 2 ரன்களும் அடிக்க, கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் அந்த பவுண்டரியையும் அடித்து சிஎஸ்கேவிற்கு போட்டியை முடித்துகொடுத்தார் தோனி. தோனி 13 பந்தில் 28 ரன்களை விளாச, சிஎஸ்கே 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 7வது தோல்வியை அடைந்து படுமோசமான நிலையில் உள்ளது. சிஎஸ்கே அணி இந்த வெற்றியுடன், இந்த சீசனில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios