சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்த பிறகு நடராஜனின் மகளிடம் கொஞ்சி பேசிய தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 29ஆவது போட்டி நேற்று சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஹைதராபாத் அணி முதலில் ஆடியது. இதில், அபிஷேக் சர்மா மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் களமிறங்கினார்.
ஹாரி ப்ரூக் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இதே போன்று மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் 35 ரன்களில் ஆட்டமிழக்க, டெவான் கான்வே 77 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அஜின்க்யா ரகானே 9 ரன்னிலும், ராயுடு 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இதே போன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றியும் 4ல் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து எம் எஸ் தோனி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரரான உம்ரான் மாலிக் உடன் கலந்துரையாடியானார். அப்போது அவருடன் மற்ற இளம் வீரர்களும் இருந்தனர். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் மகள் ஹன்விகா உடன் அழகாக பேசி மகிழ்ந்தார்.
அப்போது எனக்கு மகள் இருக்கிறாள் என்று தோனி சொல்லவே, தம்பி இல்லையா என்று நடராஜனின் மகள் கேட்க, இல்லை இவ்வளவு உயரத்தில் ஒரு மகள் இருக்கிறாள் என்று தோனி சைகையால் கூறினார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடராஜன் தனது பள்ளிப்பருவ தோழியான பவித்ராவை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடராஜன் - பவித்ரா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஹன்விகா என்று பெயரிட்டனர்.
