குஜராத் டைட்டன்ஸூக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 169 ரன்கள் அடித்து 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆடவில்லை. எனவே ரஷீத் கான் அணியை வழிநடத்தினார். பாண்டியாவிற்கு பதிலாக அல்ஸாரி ஜோசஃப் சேர்க்கப்பட்டார். அணியின் பேலன்ஸை மனதில் வைத்து மேத்யூ வேட் நீக்கப்பட்டு ரிதிமான் சஹா சேர்க்கப்பட்டார்.

சிஎஸ்கே அணி:

ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான் (கேப்டன்), அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபெர்குசன், யஷ் தயால், முகமது ஷமி.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 3 ரன்னிலும், மொயின் அலி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடிசேர்ந்த அம்பாதி ராயுடு சிறப்பாக பேட்டிங் ஆடி 46 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், 48 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

பின்வரிசையில் ஜடேஜாவும் துபேவும் இணைந்து ஓரளவிற்கு அடித்து ஆடி டீசண்ட்டாக முடித்தனர். ஜடேஜா 12 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 169 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 170 ரன்கள் என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸூக்கு நிர்ணயித்தது.