ஐபிஎல் 13வது சீசன் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்த சீசனில் தான், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கே, முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.

எனவே அப்போதே, 14வது சீசனில் மிரட்ட வேண்டும் என்று சிஎஸ்கே கேப்டன் தோனியும், சிஎஸ்கே நிர்வாகமும் முடிவு செய்துவிட்டனர். இந்த சீசனுக்கான ஏலத்தில் மொயின் அலி, புஜாரா, கிருஷ்ணப்பா கௌதம் உள்ளிட்ட வீரர்களை, அணியில் இருக்கும் இடங்களை நிரப்ப, வழக்கம்போலவே லிமிட்டாக வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

கடந்த சீசனில் பிளே ஆஃபிற்கு செல்லாமல் வாங்கிய மரண அடியின் வலிக்கு, இந்த சீசனில் கோப்பையை வென்று மருந்து போட முனைகிறது சிஎஸ்கே. அந்தவகையில் கேப்டன் தோனி மற்றும் அணியின் சீனியர் வீரர் அம்பாதி ராயுடு ஆகியோர் சிஎஸ்கே பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளனர்.

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 10ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் 40 நாட்கள் இருக்கும் நிலையில், முதல் அணியாக சிஎஸ்கே பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாகவே தோனி ஐபிஎல்லுக்கான தயாரிப்பில் இறங்கியுள்ளதால், இம்முறை செம டஃப் கொடுக்கும் சிஎஸ்கே.