Asianet News TamilAsianet News Tamil

#CSKvsRCB ஆர்சிபியை ஒற்றை ஆளாக வீழ்த்திய ஜடேஜா..! அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே புள்ளி பட்டியலில் முதலிடம்

ஆர்சிபி அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
 

csk beat rcb by 69 runs in ipl 2021
Author
Mumbai, First Published Apr 25, 2021, 7:39 PM IST

சிஎஸ்கே  மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடேவில் நடந்தது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணிக்கு தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் டுப்ளெசிஸும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.  முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 9 ஓவரில் 74 ரன்களை குவித்தனர். ருதுராஜ் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களத்திற்கு வந்த ரெய்னா, 24 ரன்னில் வெளியேற, அதே ஓவரிலேயே டுப்ளெசிஸூம் ஆட்டமிழந்தார்.

14வது ஓவரில் ரெய்னாவை வீழ்த்திய ஹர்ஷல் படேல், அதே ஓவரில், அரைசதம் அடித்திருந்த டுப்ளெசிஸையும் வீழ்த்தினார். சரியாக 50 ரன்னில் வெளியேறினார் டுப்ளெசிஸ். ராயுடுவும் 14 ரன்னில் வெளியேற, 19 ஓவரில் சிஎஸ்கே அணி 154 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 

ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 36 ரன்களை விளாசினார் ஜடேஜா. கடைசி ஓவரின் முதல் 2 பந்திலும் சிக்ஸர் அடித்த ஜடேஜா, 3வது பந்திலும் சிக்ஸர் அடித்தார். 3வது பந்து நோ பால் என்பதால் அதற்கும் ஒரு ரன் கிடைத்தது. நோ பாலுக்கு வீசப்பட்ட ஃப்ரீ ஹிட்டிலும் சிக்ஸர் அடித்த ஜடேஜா, 4வது பந்தில் 2 ரன்களும், ஐந்தாவது பந்தில் சிக்ஸரும், கடைசி பந்தில் பவுண்டரியும் அடிக்க, கடைசி ஓவரில் சிஎஸ்கேவிற்கு 37 ரன்கள் கிடைத்ததையடுத்து, 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி.

192 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அதிரடியாக தொடங்கினார். ஆனால் கோலி 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த வாஷிங்டன் சுந்தர் பெரிய ஷாட் ஆடமுடியாமல் திணறி 7 ரன்னுக்கு வெளியேறினார்.

அபாரமாக ஆடிய தேவ்தத் படிக்கல்லை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். படிக்கல் 15 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் அடித்த நிலையில், அவரை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.

அதன்பின்னர் ஆர்சிபி அணியின் முக்கியமான வீரர்களான மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன் ஆகிய அனைவரையுமே ஜடேஜா வீழ்த்தினார். மேக்ஸ்வெல்லை போல்டாக்கி அனுப்பிய ஜடேஜா, டிவில்லியர்ஸையும் வீழ்த்தினார். 

டேனியல் கிறிஸ்டியனை டைரக்ட் த்ரோ அடித்து ரன் அவுட்டாக்கினார் ஜடேஜா. ஆர்சிபி அணியின் முக்கியமான வீரர்கள் அனைவருமே 10 ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறியதால், ஆர்சிபி இன்னிங்ஸின் பாதியிலேயே சிஎஸ்கேவின் வெற்றி உறுதியாகிவிட்டது. 

16வது ஓவரிலேயே ஆர்சிபி அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்ட சிஎஸ்கே பவுலர்களால் கடைசி வரை கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 20 ஓவரில் 122 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி முதலிடத்தை பிடித்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அசத்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios