இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான ஏசிசி வளர்ந்து வரும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் தேசிய கொடியில் மோடின்னு எழுதி ரசிகர்கள் காண்பித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஏசிசி வளர்ந்து வரும் ஆண்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டி இலங்கையில் இன்று நடந்தது. இதில், இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டனான யாஷ் துல் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்த அணியின் தொடக்க வீரர்களான சைம் அயூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. சைம் அயூப் 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். உமைர் யூசுப் 35 ரன்களில் ஆட்டமிழக்க, சாஹிப்சாதா ஃபர்ஹான் 65 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார்.
காசீம் அக்ரம் 0 ரன்னிலும், கேப்டனும், விக்கெட் கீப்பருமான முகமது ஹரீஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் பொறுமையாக, நிதானமாக விளையாடி ரன்கள் குவித்த தயப் தாஹிர் 71 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்து, இந்தியா ஏ அணிக்கு கடின இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
போட்டியின் 44.5 ஆவது ஓவரின் போது ரசிகர்கள் தேசிய கொடியில் வெள்ளை வண்ணம் இருக்கும் பகுதியில் அசோக சக்கரத்திற்கு அருகில் மோடி என்று எழுதிய நிலையில் கொடியை காண்பித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. விமர்சகர்கள் பலரும் இச்செயலை வன்மையாக கண்டித்ததோடு மட்டுமின்றி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய இந்தியா ஏ அணிக்கு சாய் சுதர்சன் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்து 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 61 ரன்கள் சேர்த்து நடையை கட்டினார். அதன் பிறகு வந்த கேப்டன் யாஷ் துல் 39 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பட்டைய கிளப்பிய பாகிஸ்தான் ஏ – 352 ரன்கள் குவிப்பு; பழிக்கு பழி கன்ஃபார்ம்!
இறுதியாக இந்தியா ஏ அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்து 128 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக தொடர்ந்து 2ஆவது முறையாக பாகிஸ்தான் ஏ அணி சாம்பியனாகியுள்ளது.
புறக்கணிக்கப்பட்ட பாபர் அசாம், இது வளர வேண்டிய நேரம்: ஐசிசியை சாடிய சோயப் அக்தர்!
