நவம்பர் ஒன்றாம் தேதி முதல் டி20 போட்டி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 2 பயிற்சி போட்டிகள் நடந்தன. முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து லெவன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது பயிற்சி போட்டி இன்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் வின்ஸ் 46 ரன்களும் ஜோ டென்லி 25 பந்துகளில் 39 ரன்களும் அடித்தனர். கேப்டன் மோர்கன் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். ஏழாம் வரிசையில் இறங்கிய லெவிஸ் க்ரெகோரி வெறும் 11 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடி, 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 188 ரன்களை குவித்தது. 

189 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து லெவன் அணியின் தொடக்க வீரர்களாக டிம் சேஃபெர்ட்டும் கோலின் முன்ரோவும் இறங்கினர். சேஃபெர்ட் 12 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான முன்ரோ, இங்கிலாந்து பவுலிங்கை தெறிக்கவிட்டார். மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த தேவ்கிச் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு அனரு கிட்சன், முன்ரோவுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். 

முன்ரோவும் கிட்சனும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தனர். மிகச்சிறப்பாக அடித்து ஆடிய முன்ரோ, சதமடித்தார். வெறும் 57 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 107 ரன்களை குவித்து, கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து லெவன் அணியை வெற்றி பெற செய்தார். கிட்சன் 29 பந்துகளில் 48 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்து லெவன் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.