இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரரான புஜாரா, உலக டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. 2010ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். இந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் அணியின் முன்னணி வீரராக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ள புஜாரா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து என உலகின் சவாலான கண்டிஷன்கள் அனைத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார்.

இந்திய அணிக்காக 75 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள புஜாரா, 18 சதங்கள் மற்றும் 24 அரைசதங்களுடன் 5740 ரன்கள் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவை 2018-2019 சுற்றுப்பயணத்தில், அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி. அந்த தொடரில் 3 சதங்கள் விளாசிய புஜாராவின் சராசரி 74 ஆகும். இந்திய அணி தொடரை வெல்ல அவரது பங்களிப்பு மிக முக்கியமானது.

இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்கிறது. இந்த சுற்றுப்பயணத்திலும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் முனைப்பில் இருக்கும் புஜாரா, சமகால கிரிக்கெட்டின் உலக டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.

தனது உலக டெஸ்ட் லெவனின் தொடக்க வீரர்களாக, டேவிட் வார்னர் மற்றும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள புஜாரா, மூன்றாம் வரிசை வீரராக தன்னைத்தானே தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரராக வார்னருடன் வில்லியம்சனை தேர்வு செய்தது வித்தியாசமான தேர்வு தான். வில்லியம்சன் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். எந்த வரிசையிலும் இறங்கி ஆடக்கூடியவர். அந்தவகையில், வில்லியம்சனை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். 

4ம் வரிசையில் கோலி, 5ம் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் புஜாரா. சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களான கோலி, ஸ்மித், வில்லியம்சன் ஆகிய மூவரையும் தனது உலக லெவனில் உள்ளடக்கியுள்ளார் புஜாரா.

ஆல்ரவுண்டராக இங்கிலாந்தின் மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் விக்கெட் கீப்பராக நியூசிலாந்து கீப்பர் பிஜே வாட்லிங் ஆகியோரை தேர்வு செய்துள்ளார் புஜாரா. ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஷ்வினையும் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, பாட் கம்மின்ஸ் மற்றும் ரபாடா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். 12வது வீரராக ஜடேஜாவையும் 13வது வீரராக முகமது ஷமியையும் தேர்வு செய்துள்ளார்.

புஜாராவின் உலக டெஸ்ட் லெவன்:

டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், புஜாரா, விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், பிஜே வாட்லிங்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், பாட் கம்மின்ஸ், பும்ரா, ரபாடா.

12வது வீரர் - ஜடேஜா,  13வது வீரர் - முகமது ஷமி.